மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு 101 இடங்கள் அதிகரிப்பு!


தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு 101 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு 1,484 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மேலும் மாநில அரசு நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு மீதமுள்ள 50 சதவீத இடங்களை நிரப்புகிறது.
நடப்பு ஆண்டில் தமிழகத்தில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்குமாறு, இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்குத் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்தக் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் பட்ட மேற்படிப்பில் மொத்தம் 101 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி தமிழகத்தில் மொத்தம் 1,585 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை விரைவில் நடைபெற இருக்கிறது.
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கான இடங்களை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதால் மருத்துவ மாணவர்கள் பயன்பெறுவார்கள்.