இந்த வருட இறுதியிலேயே தேர்தல் வரலாம்: சோனியா


''இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே நாடாளுமன்றத் தேர்தல் வரலாம் என்பதால், காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் பாஜகவை தோற்கடிப்பதை உறுதிப்படுத்திட வேண்டும்’’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இன்று (பிப்ரவரி 8) டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பேசிய சோனியா, “நாட்டில் இப்போது சுதந்திரம், மதச்சார்பின்மை, ஜனநாயக மரபுகள் ஆகிய அனைத்து மாண்புகளும் கடுமையாக பாதிப்படைந்துவருகின்றன. இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் பன்முகத் தன்மை என்ற சிறப்பம்சம் இப்போதைய ஆட்சியாளர்களால் அபாயத்தில் இருக்கிறது. இந்த பாஜக ஆட்சி வந்த நான்கு வருடங்களில் நாட்டின் முக்கிய அமைப்புகளான நாடாளுமன்றம், நீதித்துறை, ஊடகங்கள், சிவில் சமூகம் ஆகிய அனைத்தின் மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுவருகின்றன’’ என்ற சோனியா காந்தி எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
“நாட்டில் நடக்கும் நிலவரங்களைப் பார்த்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் காங்கிரஸோடு ஒன்றிணைய வேண்டும். அண்மையில் நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தல், ராஜஸ்தான் மாநில இடைத்தேர்தல் முடிவுகளின் மூலம் நாட்டில் மாற்றத்தின் காற்று வீசத் தொடங்கிவிட்டது தெரிகிறது. எதிர்வரும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலும் காங்கிரஸின் மறுமலர்ச்சியை உறுதி செய்யும் என்று நம்புகிறேன். தற்போது நாடு முழுவதும் பாஜகவுக்கு மக்களிடையே இருக்கும் அதிருப்தியை காங்கிரசின் ஆதரவாக மாற்ற காங்கிரஸ் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும், இந்த ஆண்டின் இறுதியிலேயேகூட நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும்’’ என்று வேண்டுகோள் வைத்த சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் பற்றியும் இக்கூட்டத்தில் பேசியுள்ளார்.