ஐ.எஸ்.எல்.: போராடும் அணிகள்!


இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துத் தொடரில் நேற்று (பிப்ரவரி 7) நடைபெற்ற போட்டியில் புனே அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் தொடர் கடந்த நவம்பர் (2017) மாதம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. அதில் கவுஹாத்தியில் நேற்று நடைபெற்ற 66ஆவது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி அணியும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் மோதின.
ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பெற்று விட்ட புனே அணி அதனைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகப் போராடியது. நார்த் ஈஸ்ட் அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் சிறப்பாக விளையாடி எதிரணிக்குக் கடும் சவாலை ஏற்படுத்தியது. எனவே நேற்ரைய போட்டி மிக்வௌம் விறுவிறுப்பானதாக அமைந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
போட்டியின் முதல் பாதி முழுவதும் நார்த் ஈஸ்ட் அணி ஆதிக்கம் செலுத்தியது, இருப்பினும் அவர்கள் அடித்த பெரும்பாலான கோல் வாய்ப்புகள் தவறியதால் அந்த அணி முன்னிலைத் பெற தவறியது. ஆனால் இரண்டாவது பாதியில் புனே அணி சிறப்பாக விளையாடத் தொடங்கியதும் நார்த் ஈஸ்ட் அணிக்கு வாய்ப்பு குறைந்தது. இரு அணி வீர்களும் எதிரணியை கோல் அடிக்கவிடாமல் தடுப்பதில் சிறப்பாகச் செயல்பட்டனர். அதிகமுறை கோல் முயற்சி செய்தும் நார்த் ஈஸ்ட் அணியால் கோல் அடிக்க இயலவில்லை. ஆனால் போட்டியின் 86ஆவது நிமிடத்தில் புனே அணி வீரர் மார்செலோ ஒரு கோல் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.