மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

ஹாட்ரிக் வெற்றியுடன் சாதனை!

ஹாட்ரிக் வெற்றியுடன் சாதனை!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஆறு ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இந்திய அணி இருந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 7) கேப்டவுன் மைதானத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

முதல் இரண்டு போட்டிகளில் சேஸிங் செய்து வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை வழங்கியது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் கடைசி பந்திலேயே இந்திய வீரர் ரோஹித் ஷர்மா ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஷிகர் தவன் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி குறிப்பிட்ட ஸ்கோரை எட்டியதும் இருவரும் அதிரடியாக விளையாடத் தொடங்கி ரன் சேர்க்கத் தொடங்கினர்.

விராட் படைத்த சாதனை

தவன் 76 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் டுமினி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அஜிங்க்யா ரஹானே (11) ஸ்லோவர் பந்தில் எதிர்பாராத விதத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் வந்த வீரர்கள் ஹார்திக் பாண்டியா (14) மற்றும் மஹேந்திர சிங் தோனி (10), கேதார் ஜாதவ் (1) ஆகியோர் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஆனால் மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் கோலி சிறப்பாக விளையாடி 160 ரன்களைச் சேர்த்தார். அவர் 159 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உடன் அவர் 160 ரன்களை எட்டி உள்ளார். அதுமட்டுமின்றி அவர் 100 ரன்களை ஓடியே சேர்த்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் தொடரில் நூறு ரன்களை ஓடி எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதேபோல் கேப்டனாக அவர் 12 சதமடித்து முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார். அவர் கேப்டனாக 11 ஒருநாள் சதங்களை அடித்துள்ளார்.

தோனியின் 400 விக்கெட்டுகள்

இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை சேர்த்தது. அதன்பின்னர் 304 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஹசிம் அம்லா ஒரு ரன் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ஏய்டன் மார்க்ராம் உடன் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் ஜே.பி.டுமினி சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டு சென்றார். ஏய்டன் மார்க்ராம் (32) எதிர்பாராதவிதமாக தோனியிடம் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த விக்கெட் தோனியின் 400ஆவது ஒருநாள் விக்கெட் ஆகும். இதன்மூலம் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஏமாற்றம் அளித்த வீரர்கள்

கேப்டன் ஏய்டன் மார்க்ராம் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய ஹென்ரிக் க்லாசன் 6 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் வழக்கமான அதிரடியை கைவிட்டு பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டும்னி மற்றும் மில்லர் இருவரும் தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் சரிவினை தடுக்க போராடினர். ஆனால், அரைசதம் அடித்த டுமினி ஆட்டமிழந்து வெளியேறியதும் இந்திய அணியின் கைவசம் ஆட்டம் திரும்பியது. நிதானமாக விளையாடி வந்ததால், குறைந்த பந்துகளில் அதிக ரன்களை அடிக்க வேண்டும் என்ற நிலைக்கு தென்னாப்பிரிக்க அணி தள்ளப்பட்டது. எனவே அதிரடியாக விளையாட முயற்சி செய்த தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கினர். எனவே தென்னாப்பிரிக்க அணி 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய வெற்றிக்கு உதவிய சுழல் இரட்டையர்கள்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் சஹல் இருவரும் இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர். அதேபோல் இந்தப் போட்டியிலும் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி உள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 8 பிப் 2018