மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: இனி மணல் கொள்ளைக்குத் தடையில்லை!

சிறப்புக் கட்டுரை: இனி மணல் கொள்ளைக்குத் தடையில்லை!

பா.நரேஷ்

தானைத் தலைவர், தமிழக முதல்வர் - தானொரு முதல்வர் என்பதையே மறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆளுங்கட்சிக்காரர்களின் கைப்பொம்மையாகவும், விழாக்களில் திளைக்கும் மோகக்காரராகவும், தன் அதிகாரம் என்னவென்றே தெரியாத அதிகாரியாகவும், தமிழும் வரலாறுமே தெரியாத தமிழக முதல்வராகவும் இருக்கிறார் என்பதை ஆதாரங்களுடன் தெரிந்துகொண்டு நொந்துகொள்வதற்கு முன், தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் சில அதிர்ச்சியான சம்பவங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டில் ஒரு சம்பவம் நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டை ஒருவர் கொள்ளையடிக்கிறார். நீங்கள் வழக்கு தொடுக்கிறீர்கள். உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. திருடனுக்குத் தண்டனை வழங்கப்பட்டு, வேறு எங்கும் திருட முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், அந்தத் திருடன் சார்பாக போலீஸாரே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கின்றனர். அங்கே, திருடனை விடுவித்துத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி அவன் மேலும் திருடிக்கொள்ள அனுமதியும் வழங்கப்படுகிறது.

சத்தியமாக இது கற்பனை கதையல்ல. நம் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் நிதர்சனம்.

உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போமா? புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு தனியார் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆற்று மணலை இந்தியாவில் விற்பனை செய்துவருகிறது. அப்படி இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்ட மணல், குமரியில் விற்பனை செய்யப்படுவதற்காக லாரிகளில் கொண்டு செல்லப்படும்போது ஆரல்வாய்மொழி காவல் சரகத்தில் வருவாய் அதிகாரிகளாலும் போலீஸாராலும் பறிமுதல் செய்யப்பட்டது. மத்திய அரசிடம் உரிமம் பெற்றே இறக்குமதி செய்ததாகக் கூறிய அந்நிறுவனம், பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தது.

இயற்கையின் மீதான கொடூரமான சுரண்டல்

மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், மணல் கொள்ளையால் நடக்கும் இயற்கைச் சுரண்டலையும், அதனால் விளையும் பேராபத்துகளையும் கண்டு அதிர்ந்துபோனார். எனவே, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைப் பாதுகாப்புக்காகத் தமிழகத்தில் இயங்கிவரும் அனைத்து மணல் குவாரிகளையும் ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்றும் ஜல்லியைத் தவிர கிரானைட் குவாரி உள்ளிட்ட பிற கனிமக் குவாரிகளைப் படிப்படியாக மூட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

“ஆறு மாதங்களுக்குள் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்பது அதிகமான காலக்கெடு, நாளையே மணல் குவாரிகளை மூட வேண்டும்” என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. ‘ஓலமிடும் ஆற்று மணல்’ என்ற நூலின் அறிமுக விழாவில் அவர் பேசும்போது, “மணல் விற்பனையில் முறைகேடுகள் இல்லை என்று முதலமைச்சர் சொல்வது தவறு. அனைத்து அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் தெரிந்தேதான் மணல் கொள்ளை நடக்கிறது. இந்த விதிமீறல்களைக் கண்டித்த காவல் அதிகாரிகள், தாசில்தாரர்கள், ஏன் மாணவர்கள்கூடக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசே மேல் முறையீடு செய்தது. மணல் குவாரிகளை மூடிவிட்டால் தமிழ்நாட்டின் வளர்ச்சியே தடைபட்டுவிடும் என்ற அளவுக்குத் தன் வாதங்களை முன்வைத்தார் நம் முதல்வர். ஏன் இதில் இவ்வளவு மும்முரம் காட்டுகிறார் நம் முதல்வர் என்று விசாரித்தால், ஆளுங்கட்சியினரே மணல் பிசினஸில் ஈடுபடுவதும், தற்போது, அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்துவதோடு ஆன்லைன் மூலமும் மணல் அள்ளப்படுகிறது. மணல் தேவையைக் கருத்தில்கொண்டு, புதியதாக 70 குவாரிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுத்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உத்தரவு ஆளுங்கட்சியினருக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என்னதான் தடை வந்தாலும், சேகர் ரெட்டியின் கூட்டாளிகளின் மூலம் அப்போதும் நள்ளிரவில் மணல் கொள்ளை அரங்கேறிக்கொண்டுதான் இருந்தது.

யாராலும் நிறுத்த முடியாத கொள்ளை

அவ்வளவு ஏன், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம் மற்றும் டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டனர், “கனிம வளம் சுரண்டப்படுவதையும், சட்ட விரோதமாகக் கொள்ளை அடிக்கப்படுவதையும் தடுக்க உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் ஆணை பிறப்பித்தும் பயன் இல்லை” என்று!

மணல் கொள்ளை தொடர்ந்து நடந்துவந்தால் வருங்காலத்தில் காவிரி ஆறு இருக்காது என்றும் அதைத் தேடவேண்டிய நிலை ஏற்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தனர் வழக்கறிஞர் ஆணையர்கள். இவ்வளவு நடந்தும் அமைதியாக இருக்கக் கூடாது என்றுதான், மகாதேவன் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார்.

நிலைமை இப்படியிருக்க, டெல்டா மாவட்டங்களில் கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் நீர் திறக்குமாறு கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழக அரசு சார்பில் முதல் கடிதம் அனுப்பித் தனது அதிகாரத்தை நிலைநாட்டியுள்ளார். ஒரு முதல்வராக அவரின் அதிகாரம் வெறும் கடிதத்துடன் நின்றுவிட்டதா? உண்மையில் அவரின் அதிகாரம் என்ன என்று அவருக்கு தெரிந்திருக்கிறதா? ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, முதல்வர் எனும் அதிகாரத்தை எப்படி பயன்படுத்தினார் தெரியுமா?

தமிழகக் காவிரி டெல்டா 2012ஆம் ஆண்டு கருகும் பயிரைக் காக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உறுதியோடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் அடிப்படையில் நீதிபதிகளின் உத்தரவின்படி கர்நாடக - தமிழக முதல்வர்கள் பெங்களுரில் சந்தித்துப் பேசினர். அப்போது தமிழக முதல்வர் அவமதிக்கப்பட்டார். தண்ணீர்கூட அருந்தாமல் திரும்பி வந்தார்.

இதை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்தபோது நீதிபதிகள் கர்நாடக அரசுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு இனி பேச்சுவார்த்தை நடத்துவது தேவையற்றது என்று கண்டித்ததோடு, அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்துக்குத் தண்ணீர் பெற்றுத் தரவும், உடன் மத்திய அரசிதழில் வெளியிடவும் உத்தரவிடப்பட்டது.

இந்த வரலாறுகூடவா முதல்வருக்குத் தெரியாது? பேச்சுவார்த்தை நடத்துவது தேவையற்றது என உங்கள் இதய தெய்வம் இரும்பு மனுஷி ‘அம்மா’ அவர்களே அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்ட பின்பும், இந்தப் பேச்சுவார்த்தை நாடகம் யாருக்காக முதல்வரே?

முதல்வர் நடத்தும் நாடகங்கள்

இவை மட்டுமா? தமிழகமே தள்ளாடிக்கொண்டிருக்கும்போதும் தடையில்லாமல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களைச் சிறப்பாகச் சிறப்பித்து வந்தார் தானைத் தலைவர், தமிழக முதல்வர். அது மட்டுமா? எம்.ஜி.ஆருக்கு மட்டும் விழா எடுத்தால், தமிழகத்துக்கு யார் விழா எடுப்பது என்று, சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆனதை ‘தமிழ்நாடு பொன்விழா’ ஆண்டாகக் கொண்டாடப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

அது மட்டுமா? “ ‘தமிழுண்டு, தமிழ் மக்களுண்டு, இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு’ எனும் பாவேந்தரின் வரிகளுக்கேற்ப தமிழ் மொழியையும், தமிழகத்தையும் கண்ணின்மணிபோல தொடர்ந்து காப்போம்” என்று பார்த்துப் படித்துள்ளார். நல்லவேளை எழுதிக்கொடுத்தவர் சேக்கிழாரின் வரிகளுக்கேற்ப என்று எழுதாமல் விட்டவரை சந்தோஷம். இப்படி வரலாற்று நாயகராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் தானைத் தலைவர், தமிழக முதல்வர்.

இப்படி விழாக்களையும், பொய் நாடகங்களையும் மட்டுமே நம்பி தமிழகத்தைத் தாரை வார்த்துக்கொண்டிருக்கையில், தமிழக அரசுக்கு மேலும் ஒரு கிரீடமாக வந்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கான இடைகாலத் தடை.

ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவதும், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தால், தீர்ப்பு திருத்தியமைக்கப்படுவதும் சர்வசாதாரணமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் வரலாற்றுச் சிறப்புகள். அதெப்படி நீதி இடத்துக்கு இடம் வேறுபடுகிறது என்பதும், அப்படித் தவறான நீதி வழங்கப்பட்டதெனில், அதை வழங்கியவர்களுக்குக் குறைந்தபட்ச எச்சரிக்கைகூட விடுக்க வாய்ப்பில்லை என்பதும் நீதித் துறையின் சிறப்பம்சங்கள்.

எது எப்படியோ... தமிழக அரசு வென்றுவிட்டது. அறிக்கையில் சொல்லப்பட்டதுபோல காவிரியும் காணாமல் போய்விடும். அன்று இயற்கை வெல்லும். தமிழகம் பஞ்சத்தில் தத்தளிக்கும்.

தமிழக அரசும், முதல்வரும் இவ்வளவு பேராபத்துகள் வரப்போவது தெரிந்தால், கூவத்தூர் ரிசார்ட்டில் சென்று பத்திரமாகத் தத்தளிப்பார்கள்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 8 பிப் 2018