மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: 260 வருட மரண சாசனம் ஏன்?

சிறப்புக் கட்டுரை: 260 வருட மரண சாசனம் ஏன்?

- சிவா

டிசம்பர் 7, 2017. அமெரிக்காவின் மிஷிகன் மாகாண நீதிமன்றத்தில், நீதிபதி ஜனெட் டி.நெஃப் ஒரு தீர்ப்பு எழுதிகொண்டிருந்தார். 265 குடும்பங்கள் விழுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த கண்ணீருடன் இந்தத் தீர்ப்புக்காகக் காத்திருந்தன. ஆயிரக்கணக்கான ஜிம்னாஸ்டிக் வீரர்கள் வெளியே நின்றுகொண்டிருந்தனர். லட்சக்கணக்கான மக்கள் என்ன நடக்கப்போகிறதெனப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஜனெட் டி.நெஃப் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.

“குற்றம் சுமத்தப்பட்டுத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் லேரி நாசர் செய்ததாகச் சொல்லப்பட்ட குற்றங்களுக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. முப்பத்து ஏழாயிரம் போட்டோக்கள் அவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. கைப்பற்றப்பட்ட பல வீடியோக்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவர்மீது இதற்கு முன்னரே அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அமைப்பில் பதிவு செய்யப்பட்ட புகார்களும், அப்போது நடைபெற்ற சம்பவங்களுக்கான சூழல்களும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, லேரி நாசர் குற்றவாளியென அறிவித்து அவருக்கு மூன்று 20 வருடக் கடுங்காவல் தண்டனை (60 வருடங்கள்) விதிக்கிறேன்” என்று நீதிபதி ஜனெட் டி.நெஃப் சொல்லிமுடித்தபோது இந்த வழக்கை கவனித்துக்கொண்டிருந்த அனைவருமே நெகிழ்ந்துபோனார்கள். லேரி நாசருக்கு ஆதரவாக ஒருவர்கூட இல்லை. அதுவரையிலும் நாசர் மீதான புகார்களைக் கவனிக்காமல் இருந்த யாருமே அப்போது பதவியில் இல்லை. 265 ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் கொடுத்த புகாரும், அதனால் ஏற்பட்ட அழுத்தமும் USAG எனப்படும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அமைப்பின் பல நிர்வாகிகளைப் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தது.

USAGஇன் தலைவர் ஸ்டீவ் பென்னி 2017 மார்ச் மாதம் ராஜினாமா செய்தபோது “எனக்குத் தெரிந்தவரையில் மூன்றாவது நபர் சொல்லும் எந்தவொரு புகாரையும் விசாரிக்க வேண்டிய கடமை எனக்கு இல்லை என USAG விதி சொல்கிறது. பாதிக்கப்பட்டவர் அல்லது அவர்களது பெற்றோர் புகார் அளித்தால் மட்டுமே விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களைக் காவல் துறையில் ஒப்படைக்க வேண்டுமென்பது விதி. அதைத்தான் நான் பின்பற்றினேன்” என்று கூறினார். பென்னி குறிப்பிட்ட இந்த USAGஇன் ஒரே ஒரு விதியினால், ஆயிரக்கணக்கான அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நாசருக்கு எதிராக மட்டுமே 265 வீராங்கனைகள் ஒன்று திரண்டிருக்கின்றனர். இவர்களது சாட்சியங்கள் நாசருக்கு 260 வருட சிறைத் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

பாலியல் குற்றச்சாட்டுகள்

2015ஆம் ஆண்டு முதல் நாசருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் USAGஇல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நேரடியாக பாதிக்கப்பட்டவர்களது புகார் இல்லை என்று அவற்றை USAG நிராகரித்தது. செப்டம்பர் 2016இல், ரேச்சல் டெனோலாந்தர் தானே நேரடியாக பாதிக்கப்பட்டேன் என்று புகார் கொடுத்து முன்வந்தார். அமெரிக்க முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளான ஜென்னெட் அண்டொலின், ஜெசிகா ஹாவர்டு, ஜேமி டண்ட்செர், அலி ரைஸ்மென் ஆகியோர் CBS செய்தி நிறுவனத்தின் 60 Minutes எனப்படும் தொலைக்காட்சித் தொடரில் பேட்டி கொடுத்து லேரி நாசர் தண்டிக்கப்படுவதற்கான காத்திரமான காரணங்களைத் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளின் மூலம் முன்வைத்தனர். அதேசமயத்தில், சமூக வலைதளங்களில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகத் தொடங்கிய #metoo ஹேஷ்டேக் போராட்டமும் சூடுபிடித்ததால் எண்ணிலடங்காத ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் தங்களை நாசருக்கு எதிரான போராட்டத்தில் சேர்த்துக்கொண்டனர். இதன் காரணமாக, நாசரின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட குழந்தைகளின் நிர்வாணப் படங்கள் முதற்கொண்டு, உடை மாற்றும் அறையில் வைத்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் வரை ஆய்வு செய்யப்பட்டு அதிலிருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டனர். குழந்தைகள் மீதான வன்கொடுமை, பிறரது அந்தரங்கத்தைப் படமாக்கியது, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை என அனைத்து வழக்குகளும் நிரூபிக்கப்பட்டன.

பாலியல் புகார்களின் மீது USAG காட்டிவந்த அலட்சியம்

லேரி நாசர் அமெரிக்க தேசிய ஜிம்னாஸ்டிக் அணியில் (USAG) அஸ்தியோபேத்திக் (Osteopathic) மருத்துவராகவும், மிஷிகன் மாகாணப் பல்கலைக்கழகத்தில் ஜிம்னாஸ்டிக் கிளப் மற்றும் கிளினிக்கிலும் பணியாற்றியிருக்கிறார். இவற்றில் இடம்பெறும் பெண் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பதுபோல அவர்களது அந்தரங்கப் பகுதிகளைத் தொடுவது, சிறப்புப் பயிற்சிக்காக வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு குளிப்பது எப்படியென ஐடியா தருவது எனப் பலவாறு பாலியல் தொல்லைகளை நிகழ்த்தியிருக்கிறார். மேலும், அந்தச் சமயங்களில் எடுக்கப்பட்ட படங்களை இணையதளங்களில் வெளியிடுவது, மிரட்டுவது போன்ற குற்றங்களையும் செய்திருக்கிறார். நாசரின் அத்துமீறல்களைப் பார்த்த சக வீராங்கனைகள் USAGயிடம் புகார் கொடுத்தபோதும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட USAGஇன் காலாவதியான விதியினால் அவை நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

1963இலிருந்து இயங்கிவரும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அமைப்பில் இதுவரை 54 பயிற்சியாளர்கள் பணியாற்றியிருக்கின்றனர். அவர்களில் 37 பேரை பாலியல் குற்றங்களுக்காகத் தங்களது அமைப்பிலிருந்து தடை செய்திருக்கிறது USAG. அவர்களை தடை செய்ததற்குப் பின்னணியில் நடைபெற்ற சம்பவங்கள், USAGஇன் விதிகள் காலாவதியானவை என்பதை நிரூபிக்க உதவுகின்றன. USAGஇன் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் மார்க் ஷிபெல்பெயின் மீது 10 வயதுக் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இந்தப் புகார் கிடப்பில் போடப்பட்டது. பிறகு அரசாங்கத்தின் மூலம் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு 2003ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். 8 வருடங்கள் சிறைவாசம் அனுபவிக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. இன்னொரு பயிற்சியாளரான வில்லியம் மெக்கேப் மீது சுமத்தப்பட்ட தொடர் புகார்களை விசாரிக்காமலே வைத்திருந்தது USAG அமைப்பு. ரகசியமாக எடுக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனையின் வீடியோவை இ-மெயில்கள் மூலம் அவர் அனுப்பியதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகே காவல் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் 30 வருட சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது.

மெக்கேப் வழக்குதான், USAG அமைப்பின் முழு கோர முகத்தை உலகத்துக்கு எடுத்துக்காட்டியது. அவ்வழக்கின் ஆவணங்களை ‘இண்டியனாபொலிஸ் ஸ்டார்’ தினப் பத்திரிகை கைப்பற்றி வெளியிட்டபோது, USAGஇல் பணியாற்றிய 54 பயிற்சியாளர்கள் மீதும் பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்டதும் அவர்கள் அதை எப்படி கிடப்பில் போட்டார்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், பாலியல் புகார்களில் சிக்கும் நபர்களின் USAG உறுப்பினர் பதவியைத் தடை செய்யக் கூடாது என்ற முன்மொழிதல் கடிதமும் கிடைத்தது. இவையெல்லாம் ஓர் அமைப்பில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை, அவ்வமைப்பைச் சார்ந்தவர்கள் மூடி மறைப்பது எப்படி என்பதற்கான சிறு உதாரணங்கள். இப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்ட USAG அமைப்பில் இடம்பெற்றிருந்த லேரி நாசருக்குத் தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனை மிகவும் பொருத்தமானது என்று முதன்முதலாக அவர்மீது நேரடிப் புகார் கொடுத்த ரேச்சல் தெரிவித்திருக்கிறார்.

டிசம்பர் 7ஆம் தேதி 60 வருட சிறைத் தண்டனை பெற்ற நாசருக்கு, அதற்கு முன்பே மிக்கிகன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் அவரது கிளினிக்கில் ஏழு மைனர் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இங்காம் கவுண்டி நீதிமன்றத்தில் 25 வருட சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரி 24ஆம் தேதி ‘இங்காம் சர்க்யூட் கவுண்டி நீதிமன்றம்’ 15 வயதுக்குட்பட்ட ஆறு சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்குகளை விசாரித்தது. இதில் 175 சாட்சியங்கள், ஒரு வார காலம் விசாரிக்கப்பட்டனர். தனக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்ததைக் கண்ட நாசர் “என்னால் பாதிக்கப்பட்ட அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். நான் வேண்டுமென்றே யாரையும் குறிப்பிட்டு இப்படிச் செய்யவில்லை. நான் சில பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறேன். நான் விரைவில் குணமடைந்துவிடுவேன். இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அனைவரும் முன்னேறிச் செல்ல வேண்டும்” என்று கூறிப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

தீர்ப்புக்கு முன்னர், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்மரி அக்வுலினாவுக்கு அவர் மீது குற்றம் சுமத்தியவர்களைக் கடிந்து, தான் தவறு செய்யவில்லை என்று கடிதம் எழுதி வியப்பை உண்டாக்கினார். மிகவும் ஆபத்தான மனிதனாக லேரி நாசரைத் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, “நான் நாசரின் மரண சாசனத்தில் கையெழுத்திடுகிறேன்” என்று கூறி 40 முதல் 175 வருடங்களுக்கான சிறைதண்டனையை பிப்ரவரி 5ஆம் தேதி உறுதிசெய்தார்.

அதேபோல ‘ஈடான் கவுண்டி’ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வழக்கில், 40 முதல் 125 வருடங்கள் சிறை தண்டனையை அறிவித்து தீர்ப்பளித்தார் நீதிமதி ஜானிஸ் கன்னிங்கம். இந்தத் தீர்ப்புக்கு முன்பு பேசிய லேரி நாசர் “உங்களது விசாரணையில் நீங்கள் குறிப்பிட்டவற்றை நான் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன்” என்று தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக் கூறினார். “கடைசி வரை நீங்கள் செய்த தவறு எந்த அளவுக்கு ஒவ்வொரு குடும்பத்தையும், அவர்களது நண்பர்களையும் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவே இல்லையே” என்று நீதிபதி கன்னிங்கம் கூறினார்.

லேரியின் இன்றைய நிலைக்குக் காரணமாக இருந்த ரேச்சல் டெனோலாந்தர், “எனது சாட்சியத்தில் ‘ஒரு சிறு பெண்ணின் மதிப்பு என்ன?’ என்று நான் கேட்டிருந்தேன். அதற்கு இன்று பதில் கிடைத்திருக்கிறது. சட்டம் எந்த அளவுக்குத் தனது சக்தியைப் பயன்படுத்தி தண்டனையைக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு முழுமையான ஒரு தண்டனையைக் கொடுத்திருக்கிறது. லேரி சிறையில் அடைக்கப்பட்டது என் வெற்றியல்ல. தீர்ப்பளித்த பின் நீதிமன்றம் கலைந்தபோது, லேரியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் என் கையைப் பிடித்தும், கட்டிப்பிடித்தும் கூறிய வாழ்த்தும் ஆறுதலும் தான் எனது வெற்றி. எங்களது வெற்றி. பெண்களின் வெற்றி. நீதியின் வெற்றி” என்று பேட்டியளித்திருக்கிறார்.

ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட பிறகும், தவறை ஒப்புக்கொள்ளாத லேரி நாசரின் மன அழுத்தத்தைக் கவனித்த நீதிபதிகள், ஒவ்வொரு வழக்கிலும் வழங்கப்பட்ட தண்டனைகளை ஒரே சமயத்தில் அல்லாமல், ஒவ்வொரு தண்டனைக் காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். ஆனால், இங்காம் கவுண்டி நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனைக் காலத்தை மட்டும் ஒரே சமயத்தில் அனுபவிக்கலாம் எனத் தெரிவித்திருக்கின்றனர். எனவே, மிக்கிகன் மாகாண நீதிமன்றம் வழங்கிய 60 வருடங்கள், இங்காம் கவுண்டி நீதிமன்றம் வழங்கிய 25 வருடங்கள், இங்காம் சர்க்யூட் கவுண்டி நீதிமன்றம் வழங்கிய 175 வருடங்கள் என 260 வருட சிறைத் தண்டனையை அனுபவிக்கப்போகிறார் லேரி நாசர்.

விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயிற்சிப் பள்ளியிலும், அரசு அமைப்புகளிலும் சேரும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் மாறாதவரை அவர்களது கழுத்தில் விழும் தங்கப் பதக்கங்கள் எந்த நாட்டுக்கும் எவ்விதப் பெருமையையும் ஏற்படுத்தாது. இதுபோன்ற தீர்ப்புகள் அத்தகைய சூழலை உருவாக்கத் துணைபுரிந்தால் அதுவே இவற்றின் மாபெரும் நன்மையாக இருக்கும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 8 பிப் 2018