மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது!

பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது!

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் வனத் துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு கடந்த மாதத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து, வேடந்தாங்கலில் உள்ள புகழ்பெற்ற பறவைகள் சரணாலயத்திலும், கன்னியாகுமரி வன உயிரினங்கள் சரணாலயத்திலும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.

வேடந்தாங்கல் சரணாலயம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்த ஓர் இடம். இந்தச் சரணாலயம் பல சிறிய ஏரிகள் சேர்ந்து சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன.

ஒவ்வொரு வருடமும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 40,000க்கும் அதிகமான பறவைகள் இந்தச் சரணாலயத்துக்கு வருகை தருகின்றன. இதில் கனடா, சைபீரியா, வங்களா தேசம், பர்மா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளிலிருந்து பல அரியவகை பறவைகள் வருகின்றன.

அத்தகைய சரணாலயத்தில் நேற்று பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்பு பணியில் வனத் துறை ஊழியர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வேடந்தாங்கல் ஏரியைப் போல, மதுராந்தகம் ஏரி, கரிக்கிலி ஏரி ஆகிய ஏரிகளிலும் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணி இன்றும் (பிப்ரவரி 8) மாவட்டம் முழுவதும் பறவைகள் அதிகம் வந்து செல்லும் நீர்நிலைகள், வயல்வெளிகளிலும் நடைபெறும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வன உயிரினங்கள் சரணாலயம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வன உயிரினங்கள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இம்மாவட்டத்தில் 35 பேர் இணைந்து ஏழு குழுக்களாகப் பிரிந்து பறவைகளைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுசீந்திரம், முத்தரம், மணக்குடிகாயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தப் பணி நடைபெறுகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து இனப்பெருக்கத்துக்காக வரும் பறவைகள் குறித்தும், எத்தனை வகையான பறவைகள் வருகை தந்துள்ளன என்பது குறித்தும் இரண்டு நாள்கள் நடைபெற உள்ள இந்தக் கணக்கெடுக்கும் பணியில் கணக்கிடப்பட உள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நேற்று (பிப்ரவரி 7) தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு 70 வகையான பறவைகள் வந்ததாகவும், கடந்தாண்டை விட இந்தாண்டில் பறவைகள் வரத்துக் குறைவாக உள்ளதாகவும் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் ஓகி புயலால் பறவைகளின் வருகை குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பறவைகளின் கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பிறகே முழு விவரங்கள் தெரியவரும் எனக் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 8 பிப் 2018