விசாரணை ஆணையத்தில் சசிகலா புதிய மனு!


தனக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்களின் பட்டியலை சசிகலா பெற்றுக்கொண்ட நிலையில், நேற்று விசாரணை ஆணையத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியதையடுத்து, அவருக்குப் பதிலாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராகி விளக்கம் அளித்தார். “சம்மனுக்கு உரிய பதில் அளிக்க வேண்டுமென்றால், விசாரணையில் சசிகலாவுக்கு எதிராகச் சாட்சியம் அளித்தோரின் பட்டியலை அளிக்க வேண்டும். சாட்சிகள் அனைவரிடமும் குறுக்கு விசாரணை செய்யப்பட வேண்டும்” என்று மனுவும் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தோரின் பட்டியல் பெங்களூரு சிறையிலுள்ள சசிகலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைக் கடந்த 1ஆம் தேதி சசிகலா பெற்றுக்கொண்டதாகவும் விசாரணை ஆணையம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
வாக்குமூலப் பட்டியலைப் பெற்றுக்கொண்ட ஒரு வாரத்துக்குள் பதிலளிப்பதாக சசிகலா கூறியிருந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 6) சசிகலா தரப்பிலிருந்து விசாரணை ஆணையத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகி நேரில் விளக்கமளித்த 22 பேரின் சாட்சியங்களுடன், அவர்கள் அளித்த ஆவணங்களையும் அளிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் கிடைத்த 10 நாள்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான வீடியோ வெளியானதில் அலட்சியமாக இருந்ததாகக் குறிப்பிட்டிருப்பதையும் நீக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.