வெளிச்சத்துக்கு வரும் பல்கலைக்கழக ஊழல்கள்!


தேர்வுப் பணிகளைத் தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் ரூ. 17.5 கோடி அளவுக்குத் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஊழல் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வேலூரில் அமைந்துள்ளது திருவள்ளுவர் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தில், தேர்வுப் பணிகளைத் தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியதன் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ. 17.5 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசியர் இளங்கோ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஒப்பந்த வெளிப்படைத்தன்மை விதிகளை மீறி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. தேர்வுப் பணிக்காக சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் நிறுவனத்திடம் விதிகளை மீறி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது” என்று குற்றச்சாட்டியுள்ள அவர், தமிழகத்தில் வேறு எந்தப் பல்கலைக்கழகத்திலும் இது போன்று டெண்டர் விடப்படுவதில்லை என்றும், கடந்த 7 பருவத் தேர்வுகளுக்கும் ஒப்பந்தபுள்ளி தரப்பட்டுள்ளதாகவும், இதில் 17.5 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
“பக்கிரிசாமி அசோகர் என்ற முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சசிகலாவின் உறவினர் என்று கூறிக்கொண்டு இந்த ஒப்பந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். அதற்குப் பின்பு வந்த தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் இந்த ஊழலுக்குத் துணைபோகின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கேள்வியெழுப்பிய 63 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மறுத்துள்ளார். இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “பல்கலைக்கழகத்திலேயே தேர்வு தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் கட்டமைப்பை ஏற்படுத்திவருகிறோம். விரைவில் தேர்வுப் பணிகளை வெளி நிறுவனங்களுக்கு அளிப்பது நிறுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.