பிரித்வி 2 ஏவுகணைச் சோதனை வெற்றி!

2018 ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு ஏவுகணைகள் வெற்றிகரமாகச் சோதனையிடப்பட்ட நிலையில் இன்று (பிப்ரவரி 7) மூன்றாவதாக பிரித்வி 2 ஏவுகணையும் வெற்றிகரமாகச் சோதனையிடப்பட்டது.
ஒடிசா மாநிலம் பாலச்சூர் மாவட்டம் அப்துல் கலாம் தீவில் உள்ள கடற்கரை பகுதியில் அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று தாக்கக்கூடிய பிரித்வி 2 ஏவுகணை இன்று காலை 11.35 மணியளவில் சோதனையிடப்பட்டது.
பிரித்வி-2, 9 மீட்டர் உயரம் கொண்டது. சுமார் 350 கிமீ தொலைவிலுள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. 500 கிலோ முதல் 1000 கிலோ வரையிலான எடையைச் சுமந்து சென்று இலக்கைத் தாக்கும் என்று இந்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதிலுள்ள இரண்டு இன்ஜின்கள் திரவ எரிபொருள் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணை முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.