டிஜிட்டலில் கல்வி சான்றிதழ்!

புழக்கத்தில் இருக்கும் போலி சான்றிதழ்கள் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நிதி ஆயோக்கின் கண்காணிப்பின் கீழ் டிஜிட்டல் முறையில் சான்றிதழ்கள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக 2019ஆம் ஆண்டு முதல் மும்பை ஐஐடி மற்றும் டெல்லி பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்படவுள்ளது. இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றால் விரைவில் இத்திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இத்திட்டம் தொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தகவல்கள் அனுப்பப்பட்டுவிட்டன.
தற்போது இந்தியாவில் போலி சான்றிதழ்கள் புழக்கத்தில் இருப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனைத் தடுப்பதற்காகவே டிஜிட்டல் சான்றிதழ் திட்டத்தை அரசு அமல்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் சான்றிதழ்களில் எந்த ஒரு தனி நபராலும் மாற்றம் செய்ய இயலாது.