மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

பட்ஜெட்டைத் தாக்கல் செய்யக் கூடாது!

பட்ஜெட்டைத் தாக்கல் செய்யக் கூடாது!

பெரும்பான்மையை நிரூபிக்காமல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யக் கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று (பிப்ரவரி 7) செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழக சட்டப்பேரவையின் அவசரக் கூட்டத்தை அடுத்த வாரம் கூட்டவும், 5 நாட்களுக்கு நடத்தப்படும் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து நிறைவேற்றவும் பினாமி அரசு முடிவு செய்திருக்கிறது. நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருவகின்றன. நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எந்த உரிமையும், அதிகாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மை இழந்து 6 மாதங்களாகின்றன. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவை. ஆனால், எடப்பாடி அரசுக்கு ஆதரவாக 111 உறுப்பினர்களும், எதிராக 122 உறுப்பினர்களும் உள்ளனர். இதுதான் உண்மையான கணக்கு. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் மனு கொடுத்த உடனேயே பினாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தால், அப்போதே அரசு கவிழ்ந்திருக்கும். ஆனால், மத்திய அரசின் துணையுடன் தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரைப் பதவிநீக்கம் செய்து, அதுகுறித்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் இழுத்துக்கொண்டே சென்றதால் இவ்வளவு காலம் பினாமி அரசு தப்பியது” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், “18 உறுப்பினர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்து, இம்மாத இறுதியில் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பதவிநீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டால், எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழ்ந்துவிடும். அதற்குப் பயந்துதான் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பாகவே சட்டப்பேரவையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து நிறைவேற்றிவிடலாம் என்பது தமிழக ஆட்சியாளர்களின் திட்டமாகும்” என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், ”மரபுப்படியும், தார்மிக நெறிகளின்படியும் இது தவறாகும்; இதை உயர் நீதிமன்றம்கூட ஏற்காது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, அதன் தொடர்ச்சியாகப் பெரும்பான்மையை நிரூபிக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.

18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் அடுத்த 10 முதல் 15 நாட்களில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று கூறியுள்ள அவர், “தீர்ப்பு அரசுக்கு எதிராகத்தான் இருக்கும். அதற்கு அடுத்த நிமிடமே எடப்பாடி அரசு கவிழ்ந்துவிடும் என்பது உறுதி. இந்த ஆண்டு இறுதியில் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் வழக்கை பலவீனப்படுத்தும் முயற்சி

“பேராசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி நேற்று இரவு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த ஊழலில் உயர்கல்வித் துறை அமைச்சருக்கு உள்ள பங்கு குறித்து கணபதி வெளியில் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காகச் சிறையில் அவருக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவருக்குப் பிணை வழங்கக் கூட அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த ஊழல் வழக்கையே ஒன்றுமில்லாமல் ஆக்கி துணைவேந்தர் கணபதியையும் காப்பாற்ற முயற்சிகள் நடக்கின்றன” என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.

தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தில் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட ரூ.8 கோடிப் பணத்தைப் பல்கலைக்கழகக் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்ததாக அந்த மையத்தின் முன்னாள் இயக்குநர் குணசேகரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நேர்மையாக விசாரித்துத் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்வது தொலைதூரக் கல்வி மையங்கள்தான். இது குறித்தும் விசாரணை நடத்துவதுடன், தொலைதூரக் கல்வி முறையை ஒழுங்குபடுத்த வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 7 பிப் 2018