மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

லோயா வழக்கு: குடியரசுத்தலைவரைச் சந்திக்கும் எதிர்கட்சிகள்!

லோயா வழக்கு: குடியரசுத்தலைவரைச் சந்திக்கும் எதிர்கட்சிகள்!

நீதிபதி பி.ஹெச். லோயா மரண வழக்கு தொடர்பாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்கவுள்ளன எதிர்கட்சிகள். இந்த வழக்கில் குடியரசுத்தலைவர் தலையிட வேண்டுமென்று, அவருக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடிதம் அனுப்பியுள்ளன.

2014ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியன்று, சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.ஹெச்.லோயா மரணமடைந்தார். ஒரு திருமண விழாவில் பங்கேற்கச் சென்றபோது, அவர் மரணம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. லோயாவின் உறவினர்கள், இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றம்சாட்டினர். இதுதொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. லோயா மரணம் தொடர்பாக அளிக்கப்பட்ட மூன்று பொதுநல மனுக்களின் அடிப்படையில், டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்குகளின் போக்கு குறித்து, கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர் தலைமையில் 4 நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்தது. இந்த வழக்கு விசாரணை குறித்து, கடந்த சில நாட்களாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.

நீதிபதி லோயா மரண விவகாரத்தில் குடியரசுத்தலைவர் தலையிட வேண்டுமென்று கோரி, மூன்று பக்க கடிதத்தில் எதிர்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கடிதம், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வார இறுதிக்குள் எதிர்கட்சிகள் குடியரசுத்தலைவரைச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

லோயா மரண வழக்கில் சுதந்திரமான விசாரணை வேண்டுமென்று, இந்த கடிதத்தின் சாராம்சம் அமைந்துள்ளது. இதற்காக, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பெற வேண்டுமென்றும் இதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவித்து எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட எதிர்க் கட்சியினர் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் கபில்சிபல், “பத்திரிகையாளர்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு, நீதிபதிகளுக்கு எப்போது ஆபத்து ஏற்படுகிறதோ, அப்போது ஜனநாயகத்துக்கே ஆபத்து உண்டாகிறது” என்று தெரிவித்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 7 பிப் 2018