மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

தென்பெண்ணை ஆற்று நீரைத் தடுப்பதா?

தென்பெண்ணை ஆற்று நீரைத் தடுப்பதா?

தமிழகத்திற்கு “காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல், இந்த ஆண்டு சம்பா சாகுபடி பயிர்களை கருகச் செய்துவிட்ட கர்நாடகா, வட தமிழகத்தின் நீராதாரமான தென்பெண்ணை ஆற்றில் வரும் நீரை தடுப்பதற்கானத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று(பிப்ரவரி 7) வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடக மாநிலம், சிக்கப்பல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி துர்க்கம், நந்தி மலையில் உற்பத்தியாகும் நீர், தென்பெண்ணை ஆறாக தமிழ்நாட்டின் எல்லைக்குள் நுழைகிறது. தென்பெண்ணை ஆறு சுமார் இரண்டாயிரம் ஏரிகளில் நிரம்பி, சுமார் 4 இலட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது.

தென்பெண்ணை ஆற்றில் தமிழ்நாட்டுக்கு வரும் ஒட்டுமொத்தத் தண்ணீரையும் தடுப்பதற்காகக் கர்நாடக அரசு ஒரத்தூர் ஏரியில் மிகப்பெரிய நீரேற்று நிலையம் அமைத்து, அதன் மூலம் முழுத் தண்ணீரையும் ஒசகோட்டா ஏரிக்கு திருப்பி, அங்கிருந்து கோலார் தங்கவயல், மாலூர் பகுதிகளில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கும், குண்டூர், மானியங்கிரி, சிக்கத்திருப்பதி ஏரிகளுக்கும் கால்வாய் மூலம் கொண்டு செல்ல நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் திட்டம் தீட்டி இதனைச் செயல்படுத்தியது.

பெங்களூரு நகருக்கும் நீராதாரமாக இருக்கும் தென்பெண்ணை ஆற்று நீர், பெல்லண்டூர் ஏரிக்கு வந்து வரதூர் ஏரியைச் சென்றடையும். இந்த இரு ஏரிகளும் நிரம்பிய பிறகு வெளியேறும் நீர் கிளை ஆறு மூலமாக மீண்டும் தென்பெண்ணை ஆற்றில் கலந்து தமிழகம் நோக்கி வரும்.

பெங்களூரு நகரின் கழிவு நீர், பெல்லண்டூர் மற்றும் வரதூர் ஏரிகளில்தான் கலக்கிறது. கர்நாடக அரசு இந்த இரு ஏரிகளின் நீரையும் கோலார் மற்றும் சிக்கப்பல்லாகூர் மாவட்டங்களின் விவசாயத் தேவைகளுக்குத் திருப்பி விட இந்த ஏரிகளில் ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்று நிலையங்களை அமைத்துள்ளது. பெங்களூரு நகரில் பெய்யும் மழைநீர் முழுவதும் இவ்விரண்டு ஏரிகளில்தான் வந்து சேர்ந்து தென்பெண்ணை ஆற்றின் நீராதாரமாக இருக்கிறது.

தற்போது இந்த நீரைத் தடுத்து, கோலார், சிக்கபல்லாகூர், சீனிவாசபுரா, முழுபாகல், பங்காருபேட்டை போன்ற பெங்களூரு புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட சிறு சிறு ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது.

மேலும் பெங்களூரு நீர் ஆதாரம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தின் கீழ் பெங்களூரு நகரின் கழிவு நீரையும் சுத்திகரித்து, பெல்லண்டூர், வரதூர் ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டத்தையும் கர்நாடக அரசு உருவாக்கி, தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர்கூட வந்து சேர்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “கர்நாடக அரசின் இத்திட்டங்களால் தென்பெண்ணை ஆற்றை நம்பி உள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத் தேவைக்கும், குடிநீருக்கும் சொட்டுநீர்கூட கிடைக்காது” என்று வேதனைத் தெரிவித்துள்ள அவர், இதனால் ஓசூர், கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை ஆகியவை வறண்டு போகும். தென்பெண்ணை ஆற்றில் நீர் இல்லாமல் போனால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மக்கள் பரிதவிக்கும் நிலைமை உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018