பயனர்களைச் சுமந்து செல்லும் ட்ரோன்!


சீனாவின் Ehang நிறுவனம் மனிதர்களைச் சுமந்துகொண்டு பறக்கும் ட்ரோன் ஒன்றினை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
Ehang நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற CES நிகழ்ச்சியில் மனிதர்களைச் சுமந்து செல்லும் ட்ரோன்களை வடிவமைக்க உள்ளதாகத் தெரிவித்தது. ஆனால் அதனைப் பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது அசாத்தியம் என்றே பெரும்பாலானவர்கள் கூறினர். ஆனால் இதனை நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாகச் சோதனை மேற்கொண்டுள்ளது Ehang நிறுவனம்.
சீனாவைச் சேர்ந்த Ehang நிறுவனம் இரண்டு பயணிகள் வரை ஏற்றிச்செல்லும் குவாட்காப்டர் (Quadcopter) என்னும் ட்ரோனை வடிவமைத்துள்ளது. அதன் சோதனை ஓட்டம் பல மாதங்களாக நடத்தப்பட்டுத் தற்போது வெற்றி அடைந்துள்ளது. அதிக வெப்பத்தைத் தாங்கும் வகையிலும், காற்றினை எதிர்த்துச் செல்லும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 230 கிலோ வரை சுமந்து செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் மணிக்கு 80.7 மைல் வேகத்தில் பறந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.