மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

தமிழ் இருக்கை: திமுக ரூ.1 கோடி நிதி!

தமிழ் இருக்கை: திமுக ரூ.1 கோடி நிதி!

‘ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு திமுக சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கப்படும்’ என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய வேண்டுமானால், 39 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இதில், 10 கோடி ரூபாயைத் தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு வழங்கியது. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்களால் ஆன நிதியை வழங்கி வருகின்றனர். தமிழ் ஆர்வலர்கள் மூலம் ரூ.82 லட்சம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மொத்தம் ரூ.36 கோடி திரட்டப்பட்டுள்ளதாக நேற்று (பிப்ரவரி 6) தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் திமுக ரூ.1 கோடியை நிதியாக அளிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்னைத் தமிழுக்கு உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைவது தமிழகத்தில் வாழும் ஏழரைக் கோடி தமிழர்களுக்கு மட்டுமின்றி, உலகநாடுகளில் எல்லாம் பரவி வாழ்ந்துவரும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் தேனான செய்தியாக இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழகத்தில் முதன்முதலில் திமுக ஆட்சி அமைந்தபோது, தமிழகத்தின் எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு, தமிழ் - ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து அண்ணா தீர்மானம் இயற்றினார். அந்தத் தீர்மானம் நிறைவேற்றியதன் பொன்விழா ஆண்டில், தமிழுக்குக் கிடைக்கப் போகும் ‘ஹார்வர்டு இருக்கை’ என்பது, ஒவ்வொரு தமிழருக்கும் பெருமிதத்தைத் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை” என்று குறிப்பிட்டுள்ள அவர், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், சோனியா காந்தி மூலம் தமிழ் செம்மொழிப் பிரகடன அறிவிக்கையினை வெளியிடச் செய்தவர் கருணாநிதி” என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்குவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் 6.12.2006 தீர்மானத்தை நிறைவேற்றி, அதற்கு ஆளுநர் அவர்களின் ஒப்புதலையும் பெற்று, அந்தத் தீர்மானத்தை 8.12.2006 அன்றே குடியரசுத் தலைவராக இருந்து மறைந்த அப்துல் கலாமிடம் கருணாநிதி வழங்கினார் என்று சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின் “சில இடையூறுகளால், அந்தக் கனவு நனவாக இன்னும் தாமதமானாலும் உயர் நீதிமன்றத்திலும், மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழ் நிச்சயம் ஒருநாள் அரியணை ஏறியே தீரும். ஏனென்றால் திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்தது செம்மொழியான தமிழ் மொழி. மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தவழ்ந்திட உரிமையும், தகுதியும் பெற்ற மூத்த மொழியாகத் தமிழ் இருக்கிறது” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

“இத்தகைய பின்னணியில், தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிப் பணியில் திமுகவின் அடுத்த பங்களிப்பாக, ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைவதற்கு ஒரு கோடி ரூபாயை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018