மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்காதே!

சிறப்புக் கட்டுரை: சேலம் உருக்காலையைத் தனியார்  மயமாக்காதே!

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

உலகத் தரத்தில் எஃகுத் தயாரிப்பில் புகழ்பெற்ற சேலம் உருக்காலையைத் தனியாருக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத் தொழில் வரைபடத்தில் சேலம் உருக்காலை ஒரு முக்கிய அடையாளமாகும். சேலம் கஞ்சமலை அருகே கிடைக்கும் இரும்புத் தாதுவைக்கொண்டு இரும்பாலை நிறுவ 1955இல் திட்டமிடப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்கு இடையே 1981இல்தான் இந்த ஆலை நிறுவப்பட்டது.

கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களில் உள்ள உருக்காலைகளுக்குத் தேவையான இரும்புத் தாது வேறு பல இடங்களிலிருந்தே கிடைக்கிறது. ஆனால், சேலம் இரும்பாலைக்குத் தேவையான அனைத்து மூலப்பொருள்களும் சேலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே கிடைக்கின்றன. அங்குள்ள இரும்புத் தாதுக்களில் சல்பர், பாஸ்பரஸ் ஆகியவை கலந்துள்ளன. மேலும் சுண்ணாம்புக் கல், டோலமைட்டும் சேலத்தைச் சுற்றியே கிடைக்கப் பெறுகின்றன.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் எஃகு ஆலைக்குத் தேவையான இரும்புத் தாது சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்தும், நிலக்கரி தாமோதர் பள்ளத்தாக்கிலும், சுண்ணாம்புக் கல், டோலமைட் போன்றவை ஒடிசா மற்றும் மத்தியப்பிரதேசத்திலும் பெறப்படுகிறது. கர்நாடக மாநிலம் டோர்நகல் எஃகு ஆலைக்குத் தேவையான இரும்புத் தாது கோஸ்பெட்டிலும், மற்ற கனிமங்கள் சட்டீஸ்கர், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் பெறப்படுகிறது.

மேலும் துர்காப்பூர், பொக்காரா போன்ற எஃகு ஆலைகளுக்கும் தேவையான மூலப்பொருள்கள் பல அண்டை மாநிலங்களிலிருந்தே கொள்முதல் செய்யவேண்டிய நிலையில் உள்ளது. சேலம் உருக்காலைக்கு அப்படி ஒரு நிலை இல்லை.

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது சேலம் எஃகு ஆலைத் திட்டம் வகுக்கப்பட்டபோது, விசாகப்பட்டினத்திலும் எஃகு ஆலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்தபோது விசாகப்பட்டினம் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க முயற்சிக்கப்பட்டது.

காமராஜர் அன்றைய கம்யூனிஸ்டு தலைவர் பி.ராமமூர்த்தி அவர்களை அழைத்துத் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டுபோய் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியைச் சந்தித்து சேலம் எஃகு ஆலைத் திட்டத்தை முதலில் செயல்படுத்த வலியுறுத்தும்படி வேண்டினார். பின்னர் காமராஜரும் வலியுறுத்தினார். பேரறிஞர் அண்ணாவும் சேது சமுத்திரத் திட்டம், தூத்துக்குடித் துறைமுகம், சேலம் இரும்பாலை நிறுவிட வேண்டுமென்று தன்னுடைய ஆட்சிக் காலத்திலேயே எழுச்சி நாள் என்று தமிழகம் முழுவதும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார். கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, திட்டக் கமிஷன் கூட்டம் நடைபெற்றது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வேன். இல்லையென்றால் இந்தக் கூட்டத்துக்கு வந்து பயனில்லை என்று பிரதமர் இந்திராவிடம் சேலம் இரும்பாலைத் திட்டத்துக்குக் கோரிக்கை வைத்தார். இதுபோன்ற பல அழுத்தங்களால் இந்த திட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு படிப்படியாக 1981ஆம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கியது.

தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவு

தற்போது இந்த ஆலை 2.2 லட்சம் டன் தகடு மற்றும் பட்டைகளையும், 70 ஆயிரம் டன் எவர்சில்வர், 75 ஆயிரம் டன் சிறப்பு எஃகு பொருள்கள் ஆகியவற்றையும் தயாரிக்கிறது. இத்தகைய சிறப்புகளை கொண்டுள்ள இந்த நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க இந்திய அரசு முடிவு செய்து சர்வதேச அளவில் ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது.

இந்த ஆலையை அமைக்கத் தேவையான நிலத்தையும், விரிவாக்கத் திட்டப் பணிகளுக்காக ரூ. 2,005 கோடியையும் தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும் மூலதன மானியம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மானியம், மின்சார வரிவிலக்கு மானியம் போன்று பல வழிகளில் நிதியுதவியும் செய்தது. பெருமைமிகு சேலம் உருக்காலையை தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவைக் கைவிட மாநில அளவில் பலத்த எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். ஒருவேளை மத்திய அரசு விரும்பாவிட்டால் தமிழக அரசே அதனை கையகப்படுத்தி அதற்குரிய பணத்தை குறிப்பிட்ட காலத்தில் திரும்ப செலுத்த ஏதுவாக திட்டமியற்றி இயக்க அனைத்துக்கட்சிகளின் ஆதரவோடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இந்தத் தொழிற்சாலை ஆரம்பித்து பொதுத் துறை உருக்காலை நிறுவனங்களின் நிதியுதவியால் வளர்ச்சியுற்றது. கடந்த 35 ஆண்டுகளில் பல்வேறு வணிகங்களின் மூலம் மத்திய அரசுக்கு இதுவரை அளித்த டிவிடெண்ட் தொகை 3,000 கோடி ரூபாய்.

சேலம் உருக்காலையின் சொத்து மதிப்பு 15,000 கோடி ரூபாய் என்றால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி ஆச்சர்யப்பட வைக்கிறது. இத்தகைய அசுர வளர்ச்சி பெற்ற இந்த ஆலையை அமைக்க மத்திய அரசு பாரபட்சமான நடவடிக்கைகளையே மேற்கொண்டது.

இந்த ஆலையின் கட்டமைப்புக்காக சேலம் கஞ்சமலையைச் சுற்றியுள்ள 25 கிராமங்களின் விவசாயிகளின் நன்செய் நிலங்களைக் கையகப்படுத்திய அரசு அதற்கு இழப்பீட்டுத் தொகையாகச் சொற்பத் தொகையைத்தான் வழங்கியது. 226 நபர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

இப்போது நாட்டில் இரும்பு அத்தியாவசியமான தேவையாகிவிட்டது. வீடுகள், நிறுவனங்களில் துருப்பிடிக்காத இரும்பின் பயன்பாடு பெருகிவிட்டது. ரயில், ஏவுகணை, ராக்கெட் போன்றவற்றின் தயாரிப்புகளில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்தியாவின் தனிநபர் இரும்பு நுகர்வு 2.2 கிலோ.

தனியார் நிறுவனமான ஜிண்டால்தான் சேலம் உருக்காலைக்குப் போட்டியாக உள்ளது. ஆலை நிதி ஆயோக் ஆலோசனைப்படி விற்பனைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. அரசுத் துறை நிறுவனங்களுக்குப் போதிய நிதியுதவி வழங்காமல் தனியார் நிறுவனங்களுக்குத் தாராளமாக வழங்கியதால் வங்கிகளின் நிலைமை மோசமடைந்துள்ளது. இந்தியாவில் மட்டுமே நஷ்டம் அடைந்துவரும் அரசுத் தொழிற்சாலைகளைத் தனியார் நிறுவனங்கள் வாங்குகின்றன. தனியாருக்கு லாபம் தானே முக்கியம். அப்படி தனியார் வாங்குகிறார்கள் எனில் லாபமில்லாமல் சேவை நோக்கோடு நிறுவனத்தை நடத்துவார்களா என்ற கேள்வி எழுகிறது.

சேலம் உருக்காலைக்குச் சொந்தமாக 4,000 ஏக்கர் நிலம் உள்ளது. தொழிற்சாலையும் நல்ல நிலையில் இருப்பதால் உற்பத்தியும் சிறப்பாகவே நடக்கும். மத்திய அரசின் தவறான முடிவால் ஒட்டுமொத்த துருப்பிடிக்காத இரும்பின் (Stainless Steel) சந்தையை அருகில் உள்ள ஜிண்டால் நிறுவனமே கைப்பற்றுவது எளிதாகிவிடும்.

சேலம் உருக்காலைத் தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்துடன் கடந்து சில ஆண்டுகளாக மத்திய அரசின் விற்பனை முடிவை எதிர்த்துப் போராடுகின்றனர். சேலம் மாவட்டத்தில் பல தரப்பட்ட போராட்டங்களைப் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும், ஊழியர்களும் நடத்தியுள்ளனர். அரசு பாராமுகமாகவே இருந்துவருகிறது.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித்தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை - பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 7 பிப் 2018