கருணாநிதிக்குக் கண் பரிசோதனை!

திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று சென்னையிலுள்ள அகர்வால் மருத்துவமனையில் கண் பரிசோதனை செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த ஓராண்டாக உடல்நலக் குறைவால் கோபாலபுரம் வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். அவரை பல்வேறு தலைவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முரசொலி பவள விழா காட்சி, சென்னை அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பாரவையிட்டார். கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களையும் சந்தித்துள்ளார். 2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட பிறகு இன்னும் உற்சாகமாகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 31ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அரை மணி நேரத்தில் வீடு திரும்பிய அவருக்குப் பல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கண் பரிசோதனைக்காக நேற்று (பிப்ரவரி 6) மீண்டும் திமுக தலைவர் கருணாநிதி சென்னையிலுள்ள அகர்வால் கண் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்குக் கண் பரிசோதனை செய்யப்பட்டது. சில நிமிடங்களில் பரிசோதனை முடிந்ததால் உடனடியாக அவர் வீடு திரும்பினார்.