மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

சிறப்புப் பார்வை: தனியார்மயமாகும் சுகாதார மையங்கள்!

சிறப்புப் பார்வை: தனியார்மயமாகும் சுகாதார மையங்கள்!

இந்தியா முழுவதும் உள்ள துணை சுகாதார நிலையங்களைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருகிறது. இந்தத் திட்டத்துக்குச் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

2018-2019ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், புதிய இலவச மருத்துவ வசதி திட்டத்துக்காக ரூ.1,200 கோடி நிதியைச் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியைக்கொண்டு இந்தியா முழுவதும் அத்தியாவசியமான மருந்துகளையும், நோயைக் கண்டறியும் சோதனைகளையும் இலவசமாக வழங்கும் 1.5 லட்சம் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்களைத் தனியார்மயமாக்கும் திட்டத்தைத்தான் மத்திய அரசு கொண்டுவருவதாக சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள செய்தி அறிக்கை:

“இந்தியா முழுவதும் 1 லட்சத்து 55 ஆயிரத்து 708 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நாடு முழுவதும் 5 ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் வீதம் உள்ளன. மலைப் பகுதிகளில் 3 ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் உள்ளது. மக்களுடன் நேரடியாகத் தொடர்புள்ள அடிமட்ட சுகாதார நிலையங்கள் இவையே.

இவை நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதோடு, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோரை உயர் மருத்துவ மையங்களுக்கு அனுப்பி வைக்கும் மையங்களாகவும் உள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கும், பேறு காலத்தில் உள்ள பெண்களுக்கும், மகப்பேறுக்குப் பிந்தைய நிலையில் உள்ள பெண்களுக்கும், மருத்துவ ரீதியான உதவிகள் இம்மையங்களின் மூலம் வழங்கப்படுகின்றன. குடும்ப நலத்திட்டம், கருத்தடை சாதனங்களை வழங்குதல், குடும்பநல ஆலோசனை வழங்குதல் போன்றவையும் இம்மையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுத்தல், தேசிய அளவிலான பல்வேறு நலவாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற பணிகளை உதவி சுகாதார நிலையங்கள் செய்துவருகின்றன.

தனியாரிடம் தருவதுதான் தீர்வா?

இவற்றின் பணிகள் மகத்தானவை. ஆனாலும், இம்மையங்களில் உள்ள குறைபாடுகளைப் போக்கி அவற்றின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில் அதைச் செய்யாமல், இம்மையங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கும் மெகா திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருகிறது. இது கண்டனத்துக்குரியது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள, தேசிய நலக் கொள்கை 2017இல் இந்த மையங்களைச் சுகாதார மற்றும் நல (Health and wellness) மையங்களாக மாற்றப்படும் என அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசின் 2018-19 நிதிநிலை அறிக்கையில், 1.50 லட்சம், சுகாதார மற்றும் நல மையங்களை உருவாக்க ரூ.1200 கோடியை ஒதுக்கியுள்ளது. அதாவது துணை சுகாதார நிலையங்களைச் சுகாதார மற்றும் நல மையங்களாக (Health and Wellness) மாற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

அப்படி மையங்களாக மாற்றப்படும், இந்தத் துணை சுகாதார நிலையங்களை (Sub centres), கார்ப்பரேட் நிறுவனங்களிடமும், பல்வேறு தனியார் அமைப்புகளிடமும் வழங்கிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ளது.

நாடு முழுவதும் உள்ள, 1.55 துணை சுகாதார நிலையங்களைத் தனியாரிடம் வழங்கும் மத்திய அரசின் இத்திட்டம் கிராமப்புற ஏழை எளிய மக்களின் நலன்களுக்கு எதிரானது.

ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் மத்திய அரசின் நிர்பந்தத்தால் தனியாரிடம் விடப்பட்டுள்ளன. நிதி ஆயோக், மாவட்ட மருத்துவமனைகளில் 50 படுக்கைகளைத் தனியாருக்கு வழங்க வேண்டும் என மாநில அரசுகளை நிர்பந்தப்படுத்தி வருகிறது. இரண்டாம் நிலை மூன்றாம் நிலை சிகிச்சை முறைகளையும் தனியார்மயப்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு வற்புறுத்துகிறது.

இந்த நிலையில், கிராமப்புற மக்களுக்கு நேரடியாக மருத்துவ உதவிகளை வழங்கும், துணை சுகாதார நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் செயல், அனைவருக்கும் தரமான சிகிச்சைகளை இலவசமாக வழங்கும் தனது பொறுப்பை மத்திய அரசு முற்றிலும் தட்டிக் கழிக்கும் செயலாகும்.

இந்தியாவின் ஒட்டுமொத்த அரசு மருத்துவமனைகளையும், பொது சுகாதாரத் துறையையும், தனியார்மயமாக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத செயலை எதிர்த்துப் போராட அனைவரும் முன்வர வேண்டுமெனச் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, மின்னம்பலம் சார்பாகத் தொடர்பு கொண்டு பேசியபோது, “மத்திய அரசு பட்ஜெட்டில், 1.5 லட்சம் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் வரவேற்கக்கூடியது. ஆனால், ஏழை எளிய மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இருக்கும் சுகாதார மையங்களைத் தனியார்மயமாக்குவது கண்டனத்துக்குரியது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 7 பிப் 2018