மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

சிறப்புத் தொடர்: உங்கள் மனசு!

சிறப்புத் தொடர்: உங்கள் மனசு!

டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்

முதலிடம் பெற விரும்பும் வெறி

“கல்யாண வீடா இருந்தா நான் மாப்பிள்ளையா இருக்கணும்; எழவு வீடா இருந்தா நான் பொணமா இருக்கணும்” என்று தமிழ் சினிமாவொன்றில் வில்லன் பேசுவதாக ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். மோசமான கதாபாத்திரம் பேசுவதுபோல அமைக்கப்பட்டிருந்ததால், அந்தக் காலகட்டத்தில் அதைக் கேட்டு சிலர் பயந்திருக்கலாம். இப்போதிருக்கும் இளைஞர்கள், அதை நகைச்சுவையாகக் கையாளக்கூடும். ஆனால், இந்த வார்த்தைகளின் பின்னால் ஒரு மனநோயாளியின் பிம்பம் நிழலாடுவதை, நாம் வெறுமனே கடந்துபோய்விடக் கூடாது.

எங்கும், எதிலும், எப்போதும் தனக்கு முதலிடம் கிடைக்க வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள்; அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அவர்களது இயல்பை மீறும்போது அது கண்டிப்பாக நிறையாகாது. ஒரு குறையாகவே அது மற்றவர்களால் கவனிக்கப்படும். குறிப்பாக, மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டுமே ஒருவர் தன்னை அதிகப்படியாக முன்னிறுத்துவது கண்டிப்பாக மனநலக் குறைபாடுதான். குடும்பத்தினர், உறவினர் மத்தியில் அப்படியொரு பெண்ணாகவே கருதப்பட்டாள் காஞ்சனா.

கூப்பிடாமலேயே ஆஜராகும் மனநிலை

வெளியிடங்களுக்குச் சென்றால், அவளைக் கட்டுப்படுத்துவதே பெரும்பாடாக இருக்கும். நான்கு பேர் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், தானாக அங்கு ஆஜராவாள் காஞ்சனா. என்ன பிரச்னை என்று கேளாமலேயே, ஒரு சூப்பர் பவராகத் தன்னை நிரூபித்துக்காட்ட முயல்வாள். காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டால், லஞ்சம் வாங்குகிறீர்களா என்று சம்பந்தமில்லாமல் அவர்களோடு தகராறு செய்வாள். இதனால் அவளுக்கு எந்தச் சங்கடமும் நேராது. அவளுடன் வருபவர்களுக்குதான், இதனால் மனக்கஷ்டங்கள் அதிகம்.

*

அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியோடு இருப்பதாகக் காட்டிக்கொள்வது, தானாகப் பேசுவது, முன்பின் தெரியாதவர்களோடு எல்லை கடந்து அளவளாவுவது, பளிச்சென ஒப்பனை செய்துகொள்வது, கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் ஆடைகள் அணிவது என்று தனித்துத் தெரிவதற்காக மெனக்கெடுவார். எந்த இடத்துக்குச் சென்றாலும் அங்கிருப்பவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் நடந்துகொள்வதும், சத்தமாகச் சிரிப்பதும் காஞ்சனாவின் வழக்கம். அந்த நேரத்தில், எந்தவொரு விஷயத்தில் ஈடுபடுவதற்கும் வெட்கமோ, தயக்கமோ காட்ட மாட்டார்.

சாந்தமும் நிம்மதியும் கிடைக்க வேண்டும் என்று கோயிலுக்கு அழைத்துப் போனாலும், இதே கதைதான். நெற்றில் பெரிதாகக் குங்குமம் வைத்துக்கொள்வது, விரதங்களைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பது, அதிகப்படியான பக்தி இருப்பதாகக் காட்டிக்கொள்வது என்றிருப்பார். சில நேரங்களில் சாப்பாடு வேண்டாம் என்று அடம்பிடிப்பார்; அதற்கு நேரெதிராக, பல நேரங்களில் வெளுத்துக்கட்டுவார்.

ஒருமுறை தன் கணவர் குடும்பத்தினரிடம் ரவுத்திரம் காட்டினார். மாமனார், மாமியார், நாத்தனார், கணவர் என்று ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் அவரிடம் சிக்கினர். அப்போதுதான், காஞ்சனா விபரீத மனநிலையில் இருப்பதை அவர்கள் முழுதாக நம்பத் தொடங்கினர். இதையெல்லாம்விட மிகக் கொடுமையான ஒரு விஷயம் நிகழ்ந்தபோது, அவரை மனநல சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டுமென்று தீர்மானம் செய்தனர்.

ஒரு நாளைக்கு 10 முறை உடலுறவு கொள்ள வேண்டும் என்று, காஞ்சனா தன் கணவரை வற்புறுத்தினார். வெளியே தெரியாமல் இந்த விஷயத்தை கையாள நினைத்த அவளது கணவரால், அதைச் செயல்படுத்த முடியவில்லை. ஒரு ட்டத்தில் தன் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விஷயத்தைச் சொல்ல, அவர்கள் உடைந்துபோய் விட்டனர். வீட்டுக்கு வந்த பெண்ணின் வன்முறையைவிட, இந்த குணத்தை முதலில் சீராக்க வேண்டுமென்று நினைத்தனர். காஞ்சனாவை மைண்ட் ஸோன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, காஞ்சனாவுக்குத் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருந்தது.

மருத்துவமனைக்கு வந்தபோது, காஞ்சனாவிடம் எந்த தடுமாற்றமும் இல்லை. மிக இயல்பாக இருப்பது போன்றே, எல்லோரையும் எதிர்கொண்டார். மருத்துவர்களின் ஆய்வில், முன்பே மனநோயினால் பாதிக்கப்பட்டு காஞ்சனா சிகிச்சை எடுத்துக்கொண்டது தெரியவந்தது.

கல்யாணத்துக்கு முன்பே, மனநலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதிலிருந்து தேறி வந்திருக்கிறார். ஆனால், அவரது பெற்றோர் திருமணத்தின்போது கணவர் வீட்டினரிடம் இந்த விஷயத்தைச் சொல்லவில்லை.

அதீத சுறுசுறுப்பும் அசாத்தியமான மந்தமும்

திருமணத்துக்குப் பிறகு, மனநல சிகிச்சைக்கான மாத்திரைகளையும் காஞ்சனா எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் வந்த சிக்கல் இது. இவரை பைபோலார் அபெக்டிவ் டிஸார்டர் (Bipolar Affective Disorder) பாதித்திருந்தது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மேனியா, டிப்ரஷன் என்று அடுத்தடுத்து இரண்டு கட்டத்தில் வாழ்வார்கள்.

பேச்சு, செயல்பாடு, மேக்கப், தூக்கம், செலவு செய்வது என்று எல்லாவற்றிலும் ஒருபடி அதிகமாக இருப்பார்கள். எப்போதும் பரபரவென இருப்பது, செக்ஸில் அதிக ஆர்வம்காட்டுவது, தூக்கம் குறைவது என்றிருப்பார்கள். அமைதியின்மை குடிகொண்டிருக்கும் இவர்கள், தாங்கள் யானை பலத்தோடு இருப்பதாக உணர்வார்கள். இது எல்லாமே மேனியா எனும் நிலையைக் கடக்கும்போது இருக்கும்.

டிப்ரஷன் காலகட்டத்தில், இவர்கள் முழுதாகச் சோகத்தில் அழுந்தியிருப்பார்கள். மந்தம், விரக்தி, சுறுசுறுப்பில்லாமல் இருப்பது என்றிருப்பார்கள். அந்த நேரத்தில் எந்த விஷயத்திலும் நாட்டம் இருக்காது. காரணமில்லாமல் அழுவதை வழக்கமாக்கிக் கொள்வார்கள். மொத்தத்தில் மன அழுத்தத்தில் ஊறிக் கிடப்பார்கள். பைபோலார் டிஸார்டரினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இரண்டு நிலைகளையும் அடிக்கடி கடப்பார்கள்.

காஞ்சனாவுக்கு இந்த நிலை ஏற்பட, அவரது சிறு வயது வாழ்க்கையே காரணம். இவரது தந்தையும் தாயும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள். இதைப் பார்த்தே, காஞ்சனா வளர்ந்தார். தானுண்டு, தன் வியாபாரம் உண்டு என்று வாழ்ந்தார் தந்தை. அம்மாவுக்கு மனநோய் உண்டு. ஆனால், அவர் அதற்கான மருந்துகளைச் சரிவர உட்கொள்ளவில்லை. மனநோயாளியின் மகள் என்ற அடையாளத்தினால், காஞ்சனாவுக்குச் சரியான கவனிப்போ, அரவணைப்போ, வழிகாட்டுதலோ கிடைக்கவில்லை. இதனால், தான் சரியாக வளர்க்கப்படவில்லை என்று நினைத்தார். தேவையில்லாமல் தான் வாழ்ந்துகொண்டிருப்பதாக வருத்தப்பட்டார். இந்தச் சூழலில் இருந்து விடுபட்டுப் பெரிதாகச் சாதிக்க விரும்பினார்.

இந்த எண்ணம் தோன்றிய வயதிலிருந்து, அவர் நன்றாகப் படிக்கத் தொடங்கினார். அதுவே தனக்கான அடையாளத்தைத் தருமென்று நம்பினார். ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும்போது, காஞ்சனாவின் கவனம் கலைகளின் மீது படர்ந்தது. பாட்டு, நடனம், நீச்சல், குதிரை ஏறுதல் என்று பல விஷயங்களில் ஈடுபட்டார். இதனால், காஞ்சனாவால் படிப்பில் முழுதாகக் கவனம் செலுத்த முடியவில்லை.

பத்தாம் வகுப்பில், காஞ்சனா மனதில் நினைத்த மதிப்பெண் கிடைக்கவில்லை. இதை எதிர்பார்க்காததால், அவர் மனம் உடைந்துபோனார். அதே நேரத்தில் இவரது தம்பி, அதிக மதிப்பெண் பெற்று பெற்றோரிடம் நல்ல பெயர் வாங்கத் தொடங்கினார். இது அவரது மனதில் பொறாமையை விதைத்தது. இதன் விளைவு, படிப்பில் காஞ்சனாவின் நாட்டம் பறிபோனது. இதனால், பன்னிரண்டாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டார்.

அதன்பின், வீடு மட்டுமே காஞ்சனாவின் உலகம் ஆனது. இந்த உலகத்துக்குத் தன்னை நிரூபித்துக்காட்ட வேண்டுமென்ற எண்ணம், அவரது மனதில் எப்போதும் கனன்றுகொண்டிருக்கும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது, அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வார் காஞ்சனா. அடிக்கடி பிரச்னை செய்து, அதனால் மன அழுத்தத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார். இது தொடச்சியானபோது, காஞ்சனாவின் தாழ்வுமனப்பான்மை மேலும் அதிகமானது.

‘தான் ஒரு மனநோயாளி. தன்னால் எதையும் சாதிக்க முடியாது. காலம் முழுக்க மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும்’ என்ற வருத்தம் அவரது அடிமனதில் இருந்தது. அந்த மாதிரியான நேரங்களில், அவரது மன அழுத்தம் கூடும். நீண்ட நாள்கள் இவ்வாறான அழுத்தத்தில் இருந்தபிறகு, காஞ்சனாவுக்கு ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற வெறி உண்டாகும். அப்போது, மேனியா என்ற நிலைக்குச் செல்வார். இந்த இரண்டு நிலைகளிலும் மாறி மாறி இருப்பது அவரது வழக்கமாக மாறிப்போனது. இந்த நிலைமையில்தான், காஞ்சனாவுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர் அவரது பெற்றோர்.

பிறந்த வீட்டில் இருந்ததைவிட, கணவரது வீட்டில் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்தார் காஞ்சனா. அந்த வாழ்க்கை அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. ஆனால், இவ்வளவு அன்பானவர்களிடம் உண்மையை மறைக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி அவரை வாட்டி வதைத்தது. இதன் பின்விளைவாக, அவரது தாழ்வுமனப்பான்மை மீண்டும் தூண்டப்பட்டது

காரணமில்லாத மன அழுத்தம், எந்த எண்ணத்தையும் உருவாக்கும் வல்லமை கொண்டது. அந்த வகையில்தான், கணவரின் தங்கையைவிடத் தான் குறைவான அழகோடு இருக்கிறோம் என்று நினைக்கத் தொடங்கினார் காஞ்சனா. அவள் அளவுக்குத் தனக்குத் திறமை கிடையாது என்று வருந்தினார். இதற்காகத் தனது கணவர் வெறுத்துவிடுவார் என்று நினைத்தவர், தன்னை நிரூபிக்கும் வேலைகளில் இறங்கினார். அதிலொன்று தான், ஒரு நாளில் பத்து முறைக்கும் மேல் உடலுறவுக்கு கணவரை வற்புறுத்துவது. அப்படி இருந்தால் மட்டுமே, கணவர் தன்னைவிட்டு வேறெந்தப் பெண்ணையும் ஏறிட்டுப் பார்க்க மாட்டார் என்று நம்பினார் காஞ்சனா. உண்மையிலேயே, தனது கணவர் வேறு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல்தான் இருக்கிறார் என்பதை அவர் சிந்திக்கவே இல்லை.

இதைத் தீர்க்க மருந்துகள், குடும்பநல ஆலோசனை மற்றும் தனிப்பட்ட மனநல ஆலோசனைகள் காஞ்சனாவுக்கு வழங்கப்பட்டது. சிகிச்சையினை முழுதாகப் பெற்ற பிறகு, அவளது நிலைமை இயல்புக்கு மாறியது.

பொதுவாக, மேனியா (Mania) வரும்போது, சம்பந்தப்பட்டவர்கள் அதிக சக்தியுடன் இருப்பதாக உணர்வார்கள். புதுப்புது நபர்களுடன் பழகத் துடிப்பார்கள். டிப்ரஷன் என்பது மேனியாவின் எதிர்நிலை.

மேனியா வரும்போது, ஏகப்பட்ட எண்ணங்கள் வரும். உலகமே தன் காலடியில் இருப்பதுபோலத் தோன்றும். நிறைய சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, தேவையற்ற செலவுகளில் ஈடுபடுவது என்று மேனியா நிலையில் ஒருவர் இருக்கக்கூடும்.

மன அழுத்தம் வரும்போது, உலகமே ஒன்றிணைந்து தன்னை மிதிப்பதுபோல அந்த நபர் நினைப்பார். வாழ்வின் விளிம்பில் இருப்பதுபோல தோன்றும். தன்னால் எதையும் சாதிக்க முடியாது என்று நினைப்பார். விரக்தி அதிகமாகும்போது, அவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கும் செல்வார்.

மேனியாவும் டிப்ரஷனும் தனித்தனி நோய்கள். இது அடுத்தடுத்து வருவதுதான் பைபோலார் அஃபெக்டிவ் டிசார்டர். சில பேருக்கு வெறுமனே டிப்ரஷன் மட்டுமேகூட இருக்கும்.

தொடர்ச்சியான ஆலோசனைகளும் மருந்துகளும் காஞ்சனாவின் மனதிலிருந்த நோயை குணமாக்கியது. இப்போது, எல்லோரையும்போல இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் அவர் கணவருடன் இல்லறம் நடத்திவருகிறார்.

(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

கட்டுரையாளர்கள்:

டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்.

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம் பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.

டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில் பட்டம் பெற்றவர். மது போதை குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார். குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர் திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 7 பிப் 2018