கிரண்பேடி ட்விட்டர் முடக்கம்!


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.
புதுவையை ஆளுகின்ற நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே பல்வேறு பிரச்னைகள் எழுந்து வந்தன. குறிப்பாக ஆளுநர் கிரண்பேடி அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி வந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் பாஜகவைச் சேர்ந்த மூவரை நியமன எம்.எல்.ஏக்களாக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இது நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதலை உருவாக்கியது. முதல்வர் நாராயணசாமி தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் வரம்பை மீறி செயல்படுகிறார்கள் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் ஆளுநர் கிரண்பேடியின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் நேற்று (பிப்ரவரி 6) மாலை முடக்கப்பட்டுள்ளது. இதைத் தனது வாட்ஸ்அப் செய்தி குறிப்பில் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.