மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: கூட்டுப் பயிரிடலில் சாதிக்கும் பெண்கள்!

சிறப்புக் கட்டுரை: கூட்டுப் பயிரிடலில் சாதிக்கும் பெண்கள்!

வர்ஷா தோர்கல்கர்

எப்போதெல்லாம் பருவமழை பொய்க்கிறதோ அப்போதெல்லாம் சிறு விவசாயிகளான சுசிதா வாசுதேவ் காபலே மற்றும் அவருடைய கணவர் இருவரும் விவசாயத் தினக்கூலிகளாகச் சென்றுவிடுவர். இவர்கள் ஒரு நாளைக்கு முறையே ரூ.120 மற்றும் ரூ.170 பெற்று வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமாக சோலாப்பூர் மாவட்டத்தின் வாலுஜ் கிராமத்தில் சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இதில் கரும்பு, கோதுமை மற்றும் சோளம் ஆகிய பயிர்களைப் பயிரிட்டு வந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் கிராமம் நடப்பு பருவத்தில் கடுமையான வறட்சிக்கு உள்ளாகியிருக்கிறது. சோலாப்பூர் கிராமத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான விவசாயிகள் சிறு விவசாயிகள் ஆவர். இவர்களிடம் ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலமே உள்ளது. வருடத்துக்கு ஒருமுறை கரும்பு, சோளம், கோதுமை போன்ற பயிர்களையே பிரதானமாகப் பயிரிட்டு வந்தனர். கோடைக்காலங்களில் இப்பகுதியில் மழை இருக்காது. அந்தச் சமயத்தில் இப்பகுதி மக்கள் மாற்று வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.

மழைப்பொழிவு இருந்தாலும்கூட இப்பகுதி மக்களுக்கு வேளாண் வருவாய் என்பது நிச்சயமற்ற ஒன்றாக இருந்தது. பூச்சித் தாக்குதல் மற்றும் உற்பத்திப் பொருள்களுக்கான விலை வீழ்ச்சி போன்றவை இப்பகுதி விவசாயிகளுக்குக் கடும் சவாலாக இருந்தன. இதனால் இயற்கையாகவே வேளாண் வருவாய் இவர்களுக்கு நிச்சயமற்ற ஒன்றாக இருந்தது. இங்கு வாழும் பெரும்பான்மை மக்கள் தலித்துகளாவர். இதனால் சாதி ரீதியாகவும் மிகவும் ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்களாக விளங்குகின்றனர். இதனால் காபலே உட்பட இவர்கள் அனைவரும் ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர்.

காபலே பல்வேறு வேளாண் பயிர்களைச் சாகுபடி செய்யும் திறன் கொண்டவர். ஸ்வயம் சிக்சான் பிரயோக் (சுய கற்பித்தல் சோதனை) என்ற அமைப்பில் இணைந்து வேளாண் சாகுபடி செய்யும் பயிற்சிகளை மேற்கொண்டார். இது புனேவைச் சேர்ந்த ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் மகாராஷ்டிர அரசுடன் இணைந்து வறுமை ஒழிப்புத் திட்டத்தில் செயலாற்றி வருகிறது. இந்த நிறுவனம் விவசாய முறைகளை அதிகரிக்கவும், வருவாயை அதிகரிக்கவும் கற்றுக் கொடுக்கிறது.

இந்த அமைப்பு முதலில் பன்முகத்தன்மை அடிப்படையில் பயிர் செய்யக் கற்றுக் கொடுக்கிறது. இதன்மூலம் பருப்பு, கம்பு, திணை வகைகள், பழங்கள் போன்றவற்றை வருடத்துக்கு மூன்று முறை அறுவடை செய்யப் பயிற்சியளிக்கிறது. இந்தப் பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு காபலே தன்னுடைய கணவரிடம் பன்முகத்தன்மை அடிப்படையில் பயிர் செய்ய வற்புறுத்தினார். இதன்படி ஐந்து ஏக்கரை சரிபாதியாகப் பிரித்து 2.5 ஏக்கரில் கரும்பு மற்றும் கோதுமையும், மீதமுள்ள 2.5 ஏக்கரில் கொத்தமல்லி, வெண்டைக்காய், வெங்காயம், வெந்தயம் மற்றும் தக்காளி உள்ளிட்ட 20 பயிர்களைப் பயிரிட்டனர். அறுபது வயதான பத்மினி கதே முன்பு தனது 2 ஏக்கர் நிலத்தில் கோதுமை மற்றும் கரும்பு பயிரிட்டு வந்தார். “கடந்த ஆண்டிலிருந்து பீன்ஸ், நிலக்கடலை, சோயாபீன், பட்டாணி மற்றும் மாதுளை போன்றவற்றை பயிரிட்டு வருகிறேன்” என்கிறார் பத்மினி.

இக்கிராம விவசாயிகள் தற்போது சொட்டு நீர்ப் பாசனத்துக்கு மாறியுள்ளனர். வருடத்தின் 12 மாதங்களுக்கும் தண்ணீர் இருப்பை உறுதி செய்ய அரசின் சலுகைகளையும், கடன் திட்டத்தையும் பெற்றுக்கொள்கின்றனர். காபலே கோதுமை மற்றும் சோளத்தை வீட்டுத் தேவைகளுக்காகப் பயிரிடுகிறார். இதனிடையே காய்கறிகளையும் பயிரிடுகிறார். அதேபோல இப்பகுதி பெண் விவசாயிகள் பழ வகைகளையும் சிறப்பாகப் பயிரிட்டு வருகின்றனர். காபலே கொய்யா மற்றும் பப்பாளி பழங்களையும், கதே மாதுளையையும் சிறப்பாகப் பயிரிட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் வேறு யாருமே மாதுளை விவசாயம் செய்வதில்லை. இவர் தொடக்கத்தில் மாதுளை பயிரிட்டபோது அருகிலிருப்பவர்கள் இவரைக் கேலி செய்தனர். கதேவுடைய மகன் தான் இணையதளங்களில் பார்த்து இவருக்கு மாதுளை பயிரிட உதவினார்.

பழ வகைகள் சிறப்பாக வளரத் தொடங்கின. மூன்று மாதங்களுக்குப் பிறகு காபலே காய்கறிகள் விதைக்கத் தொடங்கினார். 100 கிலோ முதல் 150 கிலோ வரை வெண்டைக்காய் உற்பத்தியானது. அந்தச் சமயங்களில் 3,000 முதல் 4,000 ரூபாய் வருவாய் ஈட்ட முடிந்தது. மற்ற நாள்களில் குறைந்தபட்சம் 30 ரூபாய்க்கு விற்பனையாகும். 4, 5 வகையான காய்கறிகளை ஒரே நாளில் அறுவடை செய்வர். சுழற்சி முறையில் வருடம் முழுவதும் காய்கறிகள் உற்பத்தியாகும்.

“இரண்டு காய்கறிகளைக் குறைவான விலைக்கு விற்க நேர்ந்தால் மற்ற இரண்டு காய்கறிகள் எனக்குக் கைகொடுக்கும்” என்கிறார் காபலே. பல்வேறு காய்கறிகளை ஒன்றாகப் பயிரிடுவதால் தனக்குப் பயனுள்ளதாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இவர் மற்றவர்களின் நிலங்களுக்கு இப்போது விவசாயப் பணிக்குச் செல்வதில்லை. ஆனால், மற்றவர்களுக்கு விவசாயம் குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார். வருவாயை மேலும் அதிகரிக்க 5 ஏக்கர் நிலத்திலும் 20 வகையான காய்கறிகளைப் பயிரிடலாம் என்ற முடிவுக்கு காபலேவின் கணவர் வந்துள்ளார்.

இந்தக் கிராமத்தில் உற்பத்தியாகும் வேளாண் பொருள்களை புனேவில் உள்ள சந்தைக்கு எடுத்துச் செல்கின்றனர். “எனக்கு இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. எனது குடும்பத்தில் இரண்டு மகன்களும், மகன்களின் மனைவியும், அவர்களின் குழந்தைகளும் உள்ளோம். இதைக்கொண்டு தான் வாழ்ந்து வருகிறோம்” என்றார் கதே.

தற்போது வாலுஜ் கிராமத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த முறையைப் பின்பற்றி விவசாயம் செய்து வருகின்றனர். ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வரையில் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். அதேசமயம் குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் இவர்களுக்கு எளிதில் கிடைக்கிறது. குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது.

எஸ்.எஸ்.பி. அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சமீர் ஷைக் கூறுகையில், “நாங்கள் இத்திட்டத்தை 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளோம். இதில் வறட்சி பாதித்த ஐந்து மாவட்டங்களும் அடங்கும். குறிப்பாக ஒஸ்மானாபாத், பீட், வாசிம், ஹிங்கோலி மற்றும் மரத்வாடா மற்றும் சோலாப்பூர் ஆகிய பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பழங்கால விவசாய முறைகளிலிருந்து கிராமத்துக்கு 25 விவசாயிகளாவது இந்தத் திட்டத்துக்கு மாறியுள்ளனர்” என்றார்.

ஒஸ்மானபாத்தில் உள்ள விவசாயிகள் சாதி நிலைகளில் உயர்ந்த சமூகத்தினராகவும், பொருளாதார நிலைகளில் வலுவற்ற சமூகத்தினராகவும் இருந்தனர். இப்போது அவர்களின் பொருளாதார நிலை மாறிவருகிறது. “பன்முகத்தன்மை கொண்ட பயிர் விவசாயத்துக்கு மாறிய பின்னர் இப்போது பட்டாணி, உளுந்து, பச்சைப்பயிறு உள்ளிட்ட பத்து வகையான பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறேன்” என்கிறார் 42 வயதான சோபனா ஜனார்தன். இவர் துலஜாபூரில் வசித்து வருகிறார். கடந்த மூன்றாண்டுகளாக நிலவும் கடும் வறட்சியையும் எதிர்கொண்டு நல்ல வருவாய் ஈட்டி வருகிறார்.

“இப்போது பல விவசாயிகள் பயிர் பரவலாக்கம் குறித்தும், பல்வேறு பயிர்களைப் பயிரிடுவது குறித்தும் நல்ல விழிப்புணர்வை அடைந்துள்ளனர். அடுத்த இரண்டு வருடங்களில் மேலும் 400 கிராமங்களுக்கு இத்திட்டத்தைக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் சமீர் ஷைக். 42 வயதான கமல் வாக்மரே பயிர் பன்முகத்தன்மையால் உண்டாகும் பொருளாதார நலன்கள் குறித்துக் கூறுகையில், “இந்தத் திட்டத்தால் மண் வளம் கூடுகிறது. பூச்சித் தாக்குதல் மற்றும் பயிர் விலை இழப்புகளிலிருந்து விவசாயிகளைக் காக்கிறது” என்றார்.

நன்றி: வில்லேஜ் ஸ்கொயர்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

புதன் 7 பிப் 2018