தங்கம் இறக்குமதி 10% சரிவு!


கடந்த ஜனவரி மாதத்தில் அகமதாபாத் விமான நிலையம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 10 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபபாய் சர்வதேச விமான நிலையம் வாயிலாக 2017ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் மொத்தம் 2.97 டன் அளவிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2018 ஜனவரி மாதத்தில் 10.5 சதவிகித சரிவுடன் 2.65 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக அகமதாபாத் விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பணிகளை மேற்கொள்ளும் ஜி.எஸ்.இ.சி.எல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவானது அதற்கு முந்தைய நான்கு மாத இறக்குமதியில் குறைந்த அளவாகும். அதாவது, அக்டோபர் மாதத்தில் 5.23 டன், நவம்பர் மாதத்தில் 14.4 டன், டிசம்பர் மாதத்தில் 13.18 டன் என்ற அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.