திருப்புமுனை ஏற்படுத்துமா ஓவியா கூட்டணி?


விமல், ஓவியா நடிக்கும் களவாணி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 6) தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது.
2010ஆம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் ஓவியா தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். சற்குணம் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
களவாணி படத்தின் தயாரிப்பாளர் களவாணி 2 என்ற டைட்டிலை முறைப்படி பதிவு செய்திருப்பதாகவும் அதே பெயரில் மற்றொரு படம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு இயக்குநருக்கா, தயாரிப்பாளருக்கா என்பதில் சர்ச்சை தொடர்வதால் விமல், ஓவியா, சற்குணம் என பழைய கூட்டணி மீண்டும் தஞ்சாவூர் வட்டாரக் கதையில் இறங்கியிருந்தாலும், படத்தின் தலைப்பைக் களவாணி 2 என குறிப்பிடப்படாமல் K2 என்றே போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் விமல் பிஹைண்ட் வுட்ஸுக்கு அளித்த பேட்டியில், “இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் படமாக இது இருக்கும் என நம்புகிறேன். 55 நாள்கள் ஒரே கட்டப் படப்பிடிப்பில் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.