தனுஷ் படத்தைத் தயாரிக்கும் சுதீப்


ப.பாண்டி படத்தைக் கன்னடத்தில் தயாரித்து நடிக்கவிருக்கிறார் கன்னட நடிகர் சுதீப்.
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிவந்த தனுஷ், இயக்குநராகக் களமிறங்கிய படம் ப.பாண்டி. ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், மடோனா செபஸ்டீன், ரேவதி ஆகியோருடன் இணைந்து தனுஷும் நடித்திருந்தார்.
64 வயதான சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் பவர் பாண்டி. தன் மனைவியை இழந்து மகனின் வீட்டில் பேரக் குழந்தைகளுக்காக ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்க, திடீரென தன் பழைய காதலியைப் பார்ப்பதற்காகச் செல்வது போல் கதை அமைக்கப்பட்டிருக்கும். சென்ற ஆண்டு வெளியாகி வெற்றிப் படமாக அமைந்த இந்தப் படத்தைக் கன்னட இயக்குநர் குருதத்தா கனிகா ரீமேக் செய்து இயக்க சுதீப் தயாரிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஸ்டுடியோ ஃபிளிக்ஸ் என்ற இணையதளப் பத்திரிகையில் வெளிவந்த செய்திக்குறிப்பில், “தமிழில் ராஜ்கிரண் நடித்த கேரக்டரில் கன்னடத்தில் முன்னணி நடிகராக விளங்கும் அம்பரீஷ் நடிக்க, ரேவதி நடித்த கேரக்டரில் சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார். அம்பரீஷின் சிறு வயது கேரக்டரில் சுதீப்பும், சுஹாசினி மணிரத்னத்தின் சிறுவயது கேரக்டரில் ‘நிபுணன்’ படத்தில் நடித்த ஸ்ருதி ஹரிஹரனும் நடிக்கிறார்கள்" என்று செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளிவரவில்லை.