மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

பந்த் யோசனை: மறுத்த ஸ்டாலின்!

பந்த் யோசனை: மறுத்த ஸ்டாலின்!

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை இன்று (பிப்ரவரி 6) காலையில் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் கூட்டினார் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஒரு கட்சிக்கு இரண்டு பேர் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்,மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டனர் பங்கேற்றனர். மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

2006-க்குப் பிறகு இப்போதுதான் அறிவாலயம் வந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. வைகோவை வரவேற்று அழைத்துச் சென்று நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார் ஸ்டாலின்.

அறிவாலயத்துக்கு வந்த அனைத்து தலைவர்களையும் ஸ்டாலின் முன்னின்று வரவேற்றார். கூட்ட அரங்குக்குள் சென்றதும் அனைத்து தலைவர்களுக்கும், ‘சர்க்காரியா கமிஷன் -ஒரு சூழ்ச்சி வலை’ என்ற முரசொலி செல்வம் எழுதிய புத்தகம் வழங்கப்பட்டது. அதை லேசாகப் புரட்டிக் கொண்டிருந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மட்டும் வந்துகொண்டிருப்பதாக தகவல் அனுப்பினார். பின் அவரும் வந்துவிட்டார்.

பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து எப்படிப்பட்ட போராட்டங்கள் நடத்துவது என்பது பற்றிய ஆலோசனை தொடங்கியது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘நமது போராட்டம் வலுவாக இருக்க வேண்டும். பந்த் நடத்தலாம் அல்லது கோட்டையை நோக்கிப் பேரணி நடத்தலாம்’ என்று ஆலோசனை தெரிவித்தார். இதை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வரவேற்றார். பந்த் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை இவர்கள் இருவரும் விளக்கமாகப் பேசினர்.

அப்போது பேசிய ஸ்டாலின், ‘பந்த் நடத்துவது பற்றி நாம ஒன்றுக்கு பல முறை யோசிக்க வேண்டும். இப்போதுதான் போராட்டம் நடந்திருக்கிறது. கட்டண உயர்வை எதிர்த்து நாமும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறோம் என்ற விமர்சனமும் வந்துடக் கூடாது. அப்புறம் பேரணின்னா, கோட்டை போய் சேர்வதற்கு முன்னாடியே கைது பண்ணிடுவாங்க. அப்புறம் நான்கு பேர் மட்டும் வந்து மனு கொடுங்கனு சொல்லுவாங்க. அது நல்லா இருக்குமா...?” என்று கேட்டார்.

பலரும் ஆலோசித்த பின் பேசிய ஸ்டாலின், ‘நாம் அனைவரும் சேர்ந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்துவோம்’ என்று சொல்ல அதுவே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 6 பிப் 2018