மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

தினகரன் வழக்கு: முதல்வருக்கு உத்தரவு!

தினகரன் வழக்கு: முதல்வருக்கு உத்தரவு!

தனி அணியாகச் செயல்பட அனுமதிக்கக் கோரி தினகரன் தாக்கல் செய்த வழக்கில் ஈபிஎஸ் -ஓபிஎஸ் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை எடப்பாடி - பன்னீர் அணிக்கு ஒதுக்கித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன் அதிமுக வேட்பாளரைத் தோற்கடித்தார். இதையடுத்து அவர் தனிக்கட்சி தொடங்கப்போவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்தச் செய்தியை தினகரன் மறுத்துவிட்டார்.

தற்போது தனி அணியாகச் செயல்பட்டுவரும் தினகரன், உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்படவும், தங்களுக்குத் தனியாக குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் எனவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு நேற்று பதில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், "உள்ளாட்சித் தேர்தலில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது, உள்ளாட்சித் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்துவதால் அதில் தலையிட எங்களுக்கு அதிகாரம் இல்லை" என்று பதிலளித்தது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று (பிப்ரவரி 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தது.

வழக்கு குறித்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், "தினகரன் எப்போதுமே அதிமுகவில் இல்லை. 2011ஆம் ஆண்டில் தினகரன் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு, அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரைக் கட்சியில் சேர்த்ததாக அறிவித்தார்கள். அதனையும் நாங்கள் பொதுக்குழுவைக் கூட்டி ரத்து செய்துவிட்டோம். தேர்தல் ஆணையம் அதனை உறுதி செய்துள்ளது. தினகரன் உச்சக்கட்ட குழப்பத்தில் இருக்கிறார். அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

செவ்வாய் 6 பிப் 2018