ஒரு நாள் சிறையில் தொழிலதிபர்!


கேரளாவைச் சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபரான பாபி செம்மனூர் பணம் செலுத்தி ஒரு நாள் முழுவதும் சிறை வாழ்க்கையை அனுபவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாபி செம்மனூருக்குத் தென்னிந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான நகைக்கடைகள் உள்ளன. பெரும் செல்வந்தரான இவருக்கு சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது நீண்ட கால ஆசை. இதனையடுத்து பாபி செம்மனூர் தனது நண்பர்களுடன் தெலங்கானாவில் உள்ள சங்கரெட்டி சிறைக்குச் சென்று, அங்கு அதிகாரிகளைச் சந்தித்து தங்களின் நோக்கத்தைத் தெரிவித்தார்.
பெரும் தொழிலதிபரின் இந்த ஆசை போலீஸ் அதிகாரிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியது. அவர்களிடம் தலா ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு, கைதிகளின் உடை மற்றும் தட்டுகள் வழங்கப்பட்டன. பின்னர் ஒரு நாள் கைதியாக சிறைவாசத்தை அனுபவித்தனர்.
இதுபற்றிப் பாபி செம்மனூர், “தவறே செய்யாமல் ஒரு நாள் முழுவதும் சிறை வாழ்க்கை அனுபவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் எனது 15 ஆண்டு கால ஆசை நிறைவேறியுள்ளது. இது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவம்” என்று தெரிவித்துள்ளார்.