மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

நீதிபதிகளை நியமனம் செய்க: கர்நாடகாவில் போராட்டம்!

நீதிபதிகளை நியமனம் செய்க: கர்நாடகாவில் போராட்டம்!

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களைக் காட்டிலும், கர்நாடகா உயர் நீதிமன்றம்தான் குறைந்தபட்ச நீதிபதிகளோடு பரிதாபமாக இயங்கி வருகிறது. இங்கே 62 நீதிபதிகள் பணியாற்ற வேண்டிய நிலையில் வெறும் 24 பேர் மட்டுமே இப்போது பணிபுரிகின்றனர். இதிலும் 8 பேர் குல்பர்கா மற்றும் தார்வாட் அமர்வில் பணியாற்றுகின்றனர். அதாவது மொத்த நீதிபதி பணியிடங்களில் 38.7% மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. பெரும்பாலான நீதிபதி பணியிடங்கள் காலியாகவே இருப்பதால் வழக்குகளில் பெரும் தேக்கம் நிலவுகிறது.

கடந்த ஆண்டு நாடு முழுவதுமுள்ள உயர் நீதிமன்றங்களில் 150 நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் கர்நாடகா உயர் நீதிமன்றத்துக்கு இரண்டு புதிய நியமனங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதுபற்றி பலமுறை முறையிட்டும் நீதி(பதி) கிடைக்காத நிலையில், கர்நாடகத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பு வழக்கறிஞர்களும் போராட்டத்தில் இறங்கிவிட்டனர்.

காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கறிஞர்கள் நேற்று (பிப்ரவரி 5) முதல் ஒரு வார தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் வழக்கறிஞர்கள்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் அரசு வழக்கறிஞர்களான பி.வி ஆச்சார்யா, அசோக் ஹரனஹள்ளி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ரவிவர்மா குமார் உட்பட மூத்த சட்ட ஆலோசகர்களும் உயர் நீதிமன்றக் கட்டிடத்தின் கோல்டன் ஜூபிலி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“உயர் நீதிமன்றத்தில் 2.5 லட்ச வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குத் தொடுத்தவர்கள் பல ஆண்டுகள் நீதிக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் அவர்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது” என்று போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் 39 அரங்குகளில் 13 மட்டுமே செயல்படுவதாகவும், 26 அரங்குகள் பூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா, பா.ஜ. எம்.எல்.ஏ. சுரேஷ் குமாருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை , சந்தித்து, நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படுவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இப்போது இருக்கும் நிலையில், நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் ஒவ்வொரு நாளும் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், அனைத்தையும் முடிப்பதற்கு கிட்டதிட்ட 15 வருடங்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகா பார் கவுன்சிலும், பெங்களூருவின் வழக்கறிஞர் சங்கமும் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதியன்று, மத்திய அரசு அட்டர்னி ஜெனரல், கே.கே. வேணுகோபால் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் முறையிடவுள்ளனர். இதைதொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடும் இந்த 8 நாட்களிலும் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரனுடன் போராட்ட இடத்துக்குச் சென்ற அம்மாநில முதல்வர் சித்தராமையா நீதிபதிகள் நியமனம் குறித்து பிரதமர் மோடி கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நீதிக்காகவும், நீதிபதிக்காகவும் கர்நாடகாவில் போராட்டம் தொடர்கிறது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

செவ்வாய் 6 பிப் 2018