மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

பிரதியுமான் வழக்கு: குற்றப் பத்திரிக்கை தாக்கல்!

பிரதியுமான் வழக்கு: குற்றப் பத்திரிக்கை தாக்கல்!

ரியான் பள்ளி மாணவர் கொலை வழக்கில், குருகிராம் நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று (பிப்ரவரி 5) குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் சர்வதேசப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்த பிரதியுமான் என்ற 7 வயதுச் சிறுவன் 2016 செப்டம்பர் 8 அன்று பள்ளிக் கழிவறையில் கழுத்தறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் பள்ளிப் பேருந்து நடத்துநர் அசோக்குமார் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு இவ்வழக்கில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டது.

பிரதியுமானின் தந்தை வருண் தாக்கூரின் வேண்டுகோளின்படி வழக்கை சிபிஐக்கு மாற்றி ஹரியானா அரசு உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பேருந்து நடத்துநருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், அதே பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் போலு என்பவர்தான் (நீதிமன்ற அறிவுரைப்படி பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிரதியுமானைக் கொலை செய்துள்ளார் என்றும் தெரியவந்தது.

16 வயதாகும் மாணவரை, சிறுவனாக அல்லாமல் பெரியவராகக் கருதி விசாரணை நடத்த வேண்டும் என்று சிறார் நீதி ஆணையம் கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது.

இந்நிலையில் அந்த மாணவனிடம் விசாரணை நடத்திய சிபிஐ நேற்று குருகிராம் நீதிமன்றத்தில் 2500 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

குற்றப் பத்திரிகையில் சிபிஐ கூறியுள்ளதாவது:

கைரேகை

தடயவியல் நிபுணர்கள் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்த கைரேகையை ஆய்வு செய்ததில் 16 வயது மாணவர்தான் கொலை செய்தது தெரியவந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நடந்த இடத்திலிருந்து கைரேகைகளை அகற்றுவது குறித்து தனது மின்னஞ்சல் ஐ.டியைப் பயன்படுத்தி இணையத்தில் போலு தேடியுள்ளார்.

சிசிடிவி காட்சிகள்

பள்ளியில் உள்ள பல சிசிடிவி காட்சிகளில் பிரதியுமானை போலு பின்தொடர்வது போலவும், கழிவறைக்கு இருவரும் செல்வது போலவும் பதிவுகள் உள்ளன. கழிவறையில் வைத்து ஒரு நிமிடத்தில் (காலை: 7.38-7.39) கொலை செய்துள்ளதாக சிபிஐ குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

காலை 7:36:03 மணியளவில் போலு கழிவறைக்குள் நுழைகிறான். 7:37:34 மணியளவில் மீண்டும் வெளியே வருகிறான். 7:38:03 மணியளவில் பிரதியுமான் கழிவறைக்குள் செல்கிறான். உடனே போலு மீண்டும் 7:38:23 மணியளவில் உள்ளே செல்கிறான். 7:39:37 மணியளவில் போலு மட்டும் வெளியே சென்றது கழிவறைக்கு வெளியே உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

கொலை ஆயுதம்

இது தவிர கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதம் போலு பயன்படுத்தியது என்று தடயவியல் ஆய்வுக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நடைபெறாது

போலு தனது நண்பர்களிடம் கடந்த ஆகஸ்ட் மாதம், தேர்வுக்குப் படிக்கத் தேவையில்லை, தேர்வு நடைபெறாது, உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என்றும்; விஷத்தைத் தண்ணீர்த் தொட்டியில் கலந்தால் அதனால் பாதிப்பு ஏற்படும், இதையடுத்து பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நடைபெறாது என்றும் கூறியதாகக் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடத்துநர் அசோக் குமாருக்கு எதிராக ஆதாரமில்லை

இந்த வழக்கை முதலில் விசாரித்த குருகிராம் காவல்துறையினர், அந்த பள்ளிப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்த அசோக் குமார் என்பவரைக் கைது செய்தனர். சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் முயற்சியில் அசோக் குமார் கொலை செய்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி போலீசார் துன்புறுத்தியுள்ளனர். ஆனால் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சிபிஐ கூறியுள்ளது.

ஜாமீன் மறுப்பு

இதனிடையே, ஜாமீன் கோரி, குற்றம் சாட்டப்பட்ட மாணவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாணவருக்கு எதிரான விசாரணையை சிபிஐ 60 நாட்களுக்குள் நிறைவு செய்யவில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

ஆனால், தற்போதைய நிலையில் அவரை ஜாமீனில் விடுவிப்பது சரியல்ல என்று கூறி மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது

இதற்கிடையே குருகிராம் காவல் துறையினர் விசாரணையின் பேரில் நடத்துநரைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினர் நியாயம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 6 பிப் 2018