மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

நாங்கள் தீவிரவாதிகளா? குலாம் நபி ஆசாத் கேள்வி!

நாங்கள் தீவிரவாதிகளா? குலாம் நபி ஆசாத் கேள்வி!

“நான் காஷ்மீர் முதல்வராக இருந்தபோது தீவிரவாதிகளை எப்படிக் கண்காணித்தேனோ, அதே வழிமுறைகளைப் பின்பற்றி பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களைக் கண்காணிக்கிறது. இது என்ன ஜனநாயகம்?’’ என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் முற்றிலும் ஒட்டுக் கேட்கப்படுவதாக அவர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று (பிப்ரவரி 5) பேசினார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத்.

“நாடு முழுதும் அச்சம் நிரம்பிய சூழலே நிலவுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. மத்திய பாஜக அரசு அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, தேசியப் புலனாய்வு முகமை ஆகிய அமைப்புகளை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்திட முயற்சித்துக்கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர்களை ஏதோ தீவிரவாதிகள் போல கண்காணிக்கிறீர்கள். தொழிலதிபர்கள் பலர் எங்களிடம் போனில் பேசுவதற்குக்கூட அச்சப்படுகிறார்கள். எங்கள் போன்கள் டேப் செய்யப்படுவதால் எங்களுடன் பேசுவதன் மூலம் தங்களுக்கும் பிரச்சினைகள் வந்துவிடக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

நான் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக இருந்தபோது நாட்டுக்கு எதிரான தீவிரவாதிகளைக் கண்காணிக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றினோமோ அதையே இப்போது இந்த அரசு எங்களைக் கண்காணிக்கப் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ன தீவிரவாதிகளா? ஜனநாயக அமைப்பில் இதுபோன்ற அச்ச உணர்வுகள் நல்லதுக்கு இல்லை. கருத்துச் சுதந்திரம், வணிகம் செய்ய சுதந்திரம், சமூகத்தில் கலந்துரையாடுவதற்கான சுதந்திரம்தான் இப்போதைய தேவை’’ என்று குலாம் நபி ஆசாத் பேசிக்கொண்டிருந்தபோது பிரதமர் மோடி அவையில்தான் இருந்தார்.

முத்தலாக் சட்டம் பற்றிப் பேசிய குலாம், “உங்களது முத்தலாக் சட்டத்தின் மூலம் நீங்கள் இப்போது மனைவி, கணவரைப் பிரிக்கிறீர்கள். கணவரைச் சிறையில் அடைத்துவிட்டு, மனைவியிடம் அவரைக் காப்பாற்றிவிட்டதாகக் கூறுவீர்கள். இஸ்லாமியர்கள் ஏற்கனவே பயத்திலும் வேலைவாய்ப்பு இல்லாமலும் உள்ளனர். அவர்களை மேலும் பிரிக்காதீர்கள். பாஜக ஆளும் ஹரியானாவில் குற்றச்செயல்கள், பாலியல் பலாத்காரங்கள் போன்றவை அதிகரித்துள்ளன. சிறுமிகள், அப்பாவி பெண்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகின்றனர். இதுதான் புது இந்தியா என்றால் எங்களுக்குப் பழைய இந்தியாவையே திருப்பிக்கொடுத்துவிடுங்கள்” என்று தெரிவித்தார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 6 பிப் 2018