திமுக ஆட்சிக்கு வர முடியாது!

என்ன செய்தாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
பேருந்துக் கட்டண உயர்வு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இது குறித்து இன்று (பிப்ரவரி 6) சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், "எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்டவற்றை நடத்திவருகின்றனர். அவர்களுடைய எண்ணம் ஜெயலலிதாவின் அரசை வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான். அதற்கு எந்த வகையில் இடையூறு கொடுக்க வேண்டுமோ அந்த வகையில் நெருக்கடி கொடுத்துவருகின்றனர். இதெல்லாம் சமாளித்து அரசை வழிநடத்திச் செல்கிறோம்" என்று கூறினார்.
தொடர்ந்து அவர் பேசியபோது, "தற்போது பட்ஜெட் தயாரித்துவருகிறோம். அடுத்து 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுக் கண்டிப்பாக வெற்றிபெறுவோம். ஸ்டாலின் முதல்வர் கனவில் இருந்துவருகிறார். ஆனால் என்ன செய்தாலும் திமுக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத ஒன்று" என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சர்களுக்குத் துணைவேந்தர் பணம் கொடுத்ததால்தான் அவர் பேராசிரியர் நியமனத்தில் பணம் பெற வேண்டியதாகிவிட்டது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, "அதில் உண்மை இருந்தால் வழக்கு தொடரட்டும். பணம் பெற்றவர்கள் யாராக இருந்தாலும் நீதிமன்றம் தண்டனை கொடுத்துதானே ஆகும். பொதுவான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் உள்நோக்கத்துடன் இவ்வாறு கூறுகின்றனர்” என்ற அமைச்சர், மாநில உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்காகத்தான் பாஜகவுடன் உறவு வைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் ஜெயக்குமாரின் இந்தப் பேச்சுக்கு விமர்சனம் செய்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் சதி: அமைச்சர் ஜெயக்குமார் - இது அபாண்டமான பொய். இதை நான் நம்ப மாட்டேன். இதுபோன்ற மக்கள் விரும்பும் நல்ல விஷயங்களை அவர் செய்ய மாட்டார். அவரால் செய்யவும் முடியாது!" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.