குப்பைக் கிடங்கில் தீ: பொதுமக்கள் சாலை மறியல்!


ஈரோடு மாநகராட்சிக் குப்பை கிடங்கில் இரண்டு நாட்களாகத் தீ எரிவதால் வெளியாகும் புகையின் காரணமாக மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகிறார்கள். இதனால், எரிந்துவரும் தீயை அணைக்கக் கோரி, அவர்கள் 2ஆவது நாளாக இன்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் பகுதியில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்தக் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டுவருகின்றன. இங்குள்ள குப்பைக் கிடங்கில் நேற்று (பிப்ரவரி 5) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் நச்சுப்புகை பரவியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் எனச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். குப்பையில் இருந்து வெளிவரும் நச்சுப்புகையால் சுவாசப் பிரச்சினை மற்றும் கண் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி வெண்டிபாளையம் பகுதியில் பொதுமக்கள் நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்றும் நச்சுப்புகை காற்றில் பரவுவதால், ஒருவித துர்நாற்றத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதிப்பட்டுவருகிறார்கள்.
இரண்டு நாட்கள் ஆகியும் குப்பைக் கிடங்கில் பற்றிய தீ அணைக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் தீயை உடனடியாக அணைக்கக் கோரி, 2ஆவது நாளாக இன்றும் வெண்டிபாளையத்தில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.