ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா


ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினேஷ், மாளவிகா நாயர் நடித்த ‘குக்கூ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராஜுமுருகன் முதல் படத்திலேயே கவனம் பெற்றார். இவர் இரண்டாவதாக இயக்கிய ஜோக்கர் திரைப்படம் தேசிய விருதைப் பெற்றது. தனது அரசியல் விமர்சனங்களைப் படங்கள் மூலம் முன்வைக்கும் ராஜுமுருகன் தன்னுடைய மூன்றாவது படத்துக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார்.
இந்தப் படத்தில், ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். கலகலப்பு 2, கீ ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து ஜீவா தற்போது கொரில்லா படத்தில் நடித்து வருகிறார். அதன் பின் ராஜுமுருகன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு ஜிப்ஸி என பெயரிடப்பட்டுள்ளதாக ராஜுமுருகன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது. கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்றுவருகிறது.
நாடோடி என அர்த்தப்படுகிற ஜிப்ஸி என்கிற இதே பெயரில் தனது பயண அனுபவங்களை ராஜு முருகன் ஆனந்த விகடனில் தொடராக எழுதிவந்தார். வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற அத்தொடர் புத்தகமாவும் வெளிவந்தது.