வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்த வேண்டும்!


மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி இந்த விவகாரத்தில் சுமூகத் தீர்வு காண வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (பிப்ரவரி 6) விடுத்துள்ள அறிக்கையில், “மக்கள் சிரமம் இன்றி தொடந்து மின் சேவையைப் பெற்றுத் தங்கள் அன்றாடப் பணிகளைச் மேற்கொள்வதற்காக, மின் வாரியத் தொழிலாளர்கள் அலைந்து திரிந்து பணியாற்றுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். சுனாமி, சூறாவளி பாதிப்பின்போதும், சமீபத்தில் குமரி மாவட்டத்தைச் சின்னாபின்னமாக்கிய ஓகி புயலின்போதும் இருளில் மூழ்கிய மக்களுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளாகவே வெளிச்சம் கிடைக்க இரவு பகல் பாராது அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தங்களது உயிரைப் பணயம் வைத்து ஆற்றிய பணியை நாடே பாராட்டியது.
மின்வாரியத் தொழிலாளர்களுக்கான 11ஆவது புதிய ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவருகிற நிலையில், கடந்த 31.01.2017 அன்று மின்துறை அமைச்சர், “வேலைப்பளு காரணமாக தொழிற்சங்கங்களுடன் பேசி முடிப்பதற்குச் சிறிது காலம் பிடிக்கும். எனவே, இடைக்கால நிவாரணமாகத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபாயும், ஓய்வு பெற்றவர்களுக்கு 1250 ரூபாயும் நான்கு மாதங்களுக்கான இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் எனப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட சங்கங்களிடம் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத சங்கங்கள், 12ஆம் தேதிக்குள் உடன்பாடு ஏற்படாவிடில் பிப்ரவரி 16ஆம் தேதியன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளன. ஏற்கனவே அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 2.57 காரணியைக் கொண்டு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டுமென்ற தங்களது கோரிக்கையை ஏற்காமல், 2.44 வழங்கிட அரசு உறுதியாக இருந்த நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் ஏற்பட்ட சங்கடங்கள் அனைவரும் அறிந்ததே!
எனவே தமிழக அரசு, 2.57 காரணியைக் கொண்டு தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்கிற தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, மின் வாரியத்தில் இயங்கிவரும் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் உடனடியாக அழைத்து சுமூகத் தீர்வு காண வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.