தென்னாப்பிரிக்க அணிக்கு மேலும் ஒரு சோதனை!


இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் அடுத்தடுத்துத் தோல்விகளைச் சந்தித்துவரும் தென்னாப்பிரிக்க அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து குவிண்டன் டி காக் விலகி உள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. டெஸ்ட் தொடரைத் தென்னாப்பிரிக்க அணி 2-1 எனக் கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் மூன்று போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவிலியர்ஸ் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ஃப்ரான்ஸ்வா டூ ப்ளஸிஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்து இந்திய அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தார். ஆனால் இரண்டாவது போட்டியில் அவரும் காயம் காரணமாக வெளியேறினார். தென்னாப்பிரிக்க அணி மோசமான தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், சிறப்பான தொடக்கத்தை வழங்கிவரும் குவின்டன் டி காக்கும் காயம் காரணமாக இனி வரும் ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்க மாட்டார் எனத் தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணியின் மேனேஜர் முகம்மது மூஸாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். நான்காவது போட்டியில் ஏபி டிவிலியர்ஸ் மீண்டும் களம் காண்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டூ ப்ளஸிஸ், டி காக் இந்த முழு தொடரிலிருந்து விலகியுள்ளது தென்னாப்பிரிக்க அணிக்குப் பெரும் பின்னடைவு என்றே கூற வேண்டும்.
மூன்றாவது ஒருநாள் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நாளை (பிப்ரவரி 7) நடைபெறவுள்ளது.