293ஆவது ஆதீனம் : திரும்பப்பெற்றார் நித்யானந்தா

நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து, தான் 293ஆவது ஆதீனம் என்பதைத் திரும்பப்பெறுவதாக நித்யானந்தா சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது இளைய மடாதிபதியாக நித்யானந்தா தன்னைத் தானே நியமித்துக்கொண்டதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெகதலபிராதாபன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். தனது மனுவில் அவர், பாலியல் வழக்கில் சிறைக்குச் சென்றுவந்த நித்யானந்தா ஆதின மடத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி மகாதேவன் அமர்வு விசாரித்துவருகிறது. 292ஆவது ஆதீனம் அருணகிரி நாதர் உயிரோடு இருக்கும் நிலையில் 293ஆவது ஆதீனம் என்று தன்னைத் தானே நித்யானந்தா எப்படிக் கூறிக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு இதனை வாபஸ் பெற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
மேலும், நித்யானந்தா தரப்பு முறையாகப் பதில் மனு தாக்கல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி விசாரணையின்போது, பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனில் கண்டிப்பாகக் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்தார்.
இந்நிலையில் நித்யானந்தா சார்பில் இன்று (பிப்ரவரி 6) பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை ஆதீனமாக நியமிக்கப்பட்டால், அவர் வாழ்க்கை முழுவதும் ஆதீனமாக இருப்பார் என்று நித்யானந்தா தரப்பில் கூறப்பட்டுவந்த நிலையில் தற்போது 293ஆவது மதுரை ஆதீனமாகத் தன்னை அறிவித்துக்கொண்டதைத் திரும்பப்பெற்றுக்கொள்வதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.