முகலாயத் தோட்டம்: மலர் கண்காட்சி தொடக்கம்!


குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள முகலாய தோட்டம் இன்று (பிப்ரவரி 6) முதல் மார்ச் 9ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் வாரம் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள முகலாய தோட்டத்தை பொதுமக்கள் கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு இன்று துவங்கி மார்ச் 9ஆம் தேதி வரை, பொதுமக்கள் பார்வைக்காக முகலாய தோட்டம் திறக்கப்பட உள்ளது. பராமரிப்பு காரணமாக ஒவ்வொரு திங்கட்கிழமைகளும், ஹோலி பண்டிகை காரணமாக மார்ச் 2ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்த `உத்யாநோத்சவ்’ கண்காட்சிக்காக நெதர்லாந்தில் இருந்து எட்டு வண்ணங்களில் 10ஆயிரம் வகையான அல்லிப்பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 70 வகையான பருவகால பூக்கள் மற்றும் 135 வகையான ரோஜாப் பூக்கள் கொண்டு முகலாயத் தோட்டத்தை அலங்கரித்துள்ளனர். இதில் பச்சை ரோஜா, கருப்பு ரோஜா, ஏஞ்சலிக் போன்ற அரிதான ரோஜா வகைகளும் அடங்கும். அருங்காட்சியகத்தை பார்வையிட ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. காலை 9 முதல் மாலை 4 மணி வரை இதனைப் பார்வை இடலாம்.
ராஷ்டிரபதி பவன் என்பது 19,000 சதுக்க மீட்டர் பரப்பளவு அரண்மனையையும், அதனைச் சுற்றியிருக்கும் 320 ஏக்கர் பரப்பளவுப் பகுதியையும் குறிக்கும். இதனைச் சுற்றி கண்கவர் தோட்டங்கள் அமைந்துள்ளது. முகலாய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் அமைக்கப்பட்ட தோட்டம் என்பதால் இது `முகலாய தோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.