மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

ஒரு வருடமாய் உறங்கும் நீட் மசோதா!

ஒரு வருடமாய் உறங்கும் நீட் மசோதா!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று சட்ட மசோதா நிறைவேற்றி சரியாக ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால் இன்று வரை அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதா இல்லையா என்று நேற்று (பிப்ரவரி 5) மாநிலங்களவையில் விவாதம் வெடித்தது.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநில அரசின் சட்ட மசோதாவுக்கும் இப்படி ஒரு கெடுவாய்ப்பான நிலை நேர்ந்திருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான மத்திய அரசின் நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகத்தில் கடந்த ஆண்டு மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, நீட்டில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கும் சட்ட மசோதா கடந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது தமிழக அரசு. எனினும் மத்திய அரசு இந்த மசோதாவைக் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் இழுத்தடித்து வந்தது.

தமிழக அரசின் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப்பவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதேபோல், கடந்த ஆண்டு ஜூலை இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழக அரசு அனுப்பிய மசோதா எங்கிருக்கிறது என்று தெரியவில்லை” என்று பதிலளித்து அதிர்ச்சியளித்தார்.

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்குப் பின் நீட் எதிர்ப்பு இன்னும் அதிகரித்தது. மாணவர்களுக்கு நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு கூறியுள்ளபோதும் நீட் தொடர்பாக குழப்பமான மனநிலையே மாணவர்கள் இடத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று(பிப்ரவரி 5 ) பேசிய அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன், “ தமிழக அரசு குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ள நீட் விலக்கு மசோதா தற்போது எந்த நிலையில் உள்ளது என்ற டி.கே. ரங்கராஜனின் கடிதத்துக்கு, தங்களுக்கு இன்னும் இந்த மசாதா வந்து சேரவில்லை என குடியரசுத் தலைவர் அலுவலகம் பதிலளித்துள்ளது.

நான் மத்திய அரசைக் குறைகூற விரும்பவில்லை, அதே நேரத்தில் தமிழக மாணவர்கள் அனுபவிக்கும் கடுந்துயர் குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழக மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா, இன்னும் குடியரசுத் தலைவருக்குச் சென்றடையவில்லை என்பது தெளிவாக தெரிகிறது’’ என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “மத்திய அரசின் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்துக்கு எதிராகத்தான் தமிழக அரசு சட்ட மசோதோ கொண்டுவந்துள்ளது. மத்திய அரசு தமிழக அரசின் மசோதாவைப் பரிசீலிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக இளம் மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். நீட் தேர்வில் போதிய மதிப்பெண் பெறாத போதிலும் மாநில அரசின் தேர்வில் அதிக மதிப்பெண்ணை அவர் பெற்றிருந்தார்.

இது மிகவும் முக்கிய பிரச்சனை. இளம் மாணவர்களின் எதிர்காலம் இதில் அடங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் அதிகாரத்தை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாது. மாநில அரசு அனுப்பிய எந்த மசோதாவையும் தங்கள் டேபிளில் மத்திய அரசு வைத்துக்கொள்ளலாம் என்று அர்த்தமல்ல. அரசியல் அமைப்பின் அடிப்படை அம்சங்களை மத்திய அரசு மீறுகிறது. தமிழக அரசின் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததன் மூலம் நாடாளுமன்றம், தமிழக சட்டப்பேரவை, குடியரசுத் தலைவர் அலுவலகம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டுள்ளன.

சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுதான் நடந்து வருகிறது. எங்கள் விதியைதான் குறைசொல்ல வேண்டும். இந்த ஆண்டு எந்த மாணவர்களும் தற்கொலை செய்துகொள்வதைப் பார்க்க நாங்கள் தயாராக இல்லை. எனவே, இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் செவி சாய்க்க வேண்டும்” என்று மத்திய அரசை கண்டிக்கவும் முடியாமல், அதேநேரம் நீட் பிரச்னையையும் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் பேசியிருக்கிறார். ஆனால் தமிழக அமைச்சர் செங்கோட்டையனோ நீட் தேர்வுப் பயிற்சி மையங்களை துவக்கும் பிசியில் இருக்கிறார்.

தனது ஒருமனதான சட்ட மசோதாவை டெல்லிக்கு அனுப்பி ஒரு வருடம் ஆகியும், அதை இன்னும் குடியரசுத் தலைவருக்கே அனுப்ப இயலாத நிலையில் தமிழகம் இருக்கிறது. இத்தனைக்கும் தமிழகத்தை ஆளும் கட்சியான அதிமுக, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி.

அனிதா உங்களை மன்னிக்கமாட்டாள்!

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 6 பிப் 2018