மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: மானியம் மட்டுமே விவசாயத்தை வளர்க்குமா?

சிறப்புக் கட்டுரை: மானியம் மட்டுமே விவசாயத்தை வளர்க்குமா?

இந்தியாவின் விவசாயக் கொள்கை சில ஆண்டுகளாகவே தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. விவசாயிகளின் வாக்குகளைக் கவர்வதற்காகக் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துதல், மின்சார மானியம் வழங்குதல், வேளாண் கடனை அதிகரித்தல் போன்ற சில பணிகளை மேற்கொள்கின்றனரே தவிர இந்தத் திட்டங்கள் விவசாயிகளுக்குப் பயனளிக்கின்றனவா என்பதற்கு ஆய்வுகளே தேவையில்லை. பயனிளிக்கவில்லை என்பதற்கு விவசாயிகள் கடந்த ஆண்டில் அடைந்த துன்பங்களே சான்றாகின்றன. 1960ஆம் ஆண்டு முதல் உண்மையான வேளாண் வளர்ச்சி 2.8 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. ஆனால் வேளாண் கடனோ 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.4.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 2009-10ஆம் நிதியாண்டில் ரூ.9.46 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. அதேநேரத்தில் நீண்டகால இடைவெளியில் வாங்கப்படும் கடன்கள் 1990-91ஆம் ஆண்டிலிருந்து 2011-12ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 39 சதவிகிதம் சரிந்துள்ளது.

தொடர்ச்சியாக இந்திய விவசாயத்தில் அரிசியும், கோதுமையும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 1983-84ஆம் நிதியாண்டில் 31 சதவிகிதமாக இருந்த அரிசி உற்பத்தி 2015-16ஆம் நிதியாண்டில் 35 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதேபோல 18.8 சதவிகிதமாக இருந்த கோதுமை 25 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அரிசி மற்றும் கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கோதுமை மற்றும் அரிசிக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.20-40ஆக இருந்தது. தற்போது விலையுயர்வு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.50-150ஆக உள்ளது. அரசி மற்றும் கோதுமைக்கான சாகுபடி வாய்ப்புகள் அதிகரித்துள்ளதும், விதைகளின் தரம் அதிகரித்துள்ளதும், தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிகரித்துள்ளதுமே இதற்கு முக்கியக் காரணமாகும். பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரையில் அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த சாகுபடியில் 83 சதவிகிதம் கோதுமை மட்டும் நெல்லாகும்.

வேளாண் துறையின் இத்தகைய வளர்ச்சிக்கு நிலத்தடி நீர்மட்டம் ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக நிலத்தடி நீர்மட்டம் சரிவால் கோதுமை மற்றும் நெல் பயிர் பரவலாக்கம் சரிந்துவருகிறது. கடந்த 30 வருடங்களில் இந்தியாவின் குறிப்பாக வட மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் 13 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்தியாவில் 50 சதவிகித விவசாயம் பாசனத்தை சார்ந்துதான் உள்ளது. இதனால் மொத்த நீரின் ஒரு பகுதியை இரண்டு அல்லது மூன்று பயிர்களுக்கு செலவிட வேண்டிய நிலை உருவாகிறது. ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 3000 லிட்டர் முதல் 5000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. கரும்புக்கு 1,500 லிட்டர் முதல் 3,000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. பருத்திக்கு 7,000 லிட்டர் முதல் 29,000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது.

சத்தீஸ்கர், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிர் பரவலாக்கம் வெகுவாக சரிந்துவிட்டது. ஒடிசாவில் 1994-95 ஆம் ஆண்டுகளில் 0.740 புள்ளிகளாக பயிர்ப் பரவலாக்கம் 2014-15ஆம் நிதியாண்டில் 0.340 புள்ளிகளாகச் சரிந்துவிட்டது. பஞ்சாபில் 0.71 புள்ளிகளிலிருந்து 0.65 புள்ளிகளாகக் குறைந்துவிட்டது. ஹரியானாவில் 0.83 புள்ளிகளிலிருந்து 0.77 புள்ளிகளாகக் குறைந்துவிட்டது. ஒடிசாவில் கூடுதலாகவே மழைப்பொழிவு இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கொள்முதல் விலைகள் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இருந்துள்ளது.

மின்சார மானியமும், விலை ஆதரவும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தாலும் சில முக்கியப் பயிர்களுக்கான பாசன வசதியை அளிப்பதில் பொறுப்பற்று செயல்பட்டிருக்கிறது அரசாங்கம். நிலத்தடி நீர்மட்டம் சரிவு ஒருபுறமென்றால் மற்றொருபுறம் யூரியா உள்ளிட்ட பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு மண் நலத்தைச் சீர்குலைத்து வருகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் அண்மையில் பயிர்ப் பரவலாக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதற்கான தேவையும் அதிகமாகவிருக்கிறது. மேலும், தானிய வகைகளை விவசாயிகளை உற்பத்தி செய்ய ஊக்குவித்தால் மட்டும் போதாது. அவற்றை பொது மக்களின் நுகர்வுக்கும் ஊக்குவிக்க வேண்டும். தானிய வகைகளுக்கான சந்தை வாய்ப்பை அதிகரிக்காமல் பயிர்ப்பரவலாக்கத்தை மட்டும் அதிகரித்தால் இந்தத் திட்டம் எந்த வகையிலும் பயனளிக்காது. மாறாக விவசாயிகளுக்குத் துன்பத்தையே மேலும் அதிகரிக்கும்.

அதேபோல அடுத்த நிதியாண்டுக்கான (2018-19) பட்ஜெட்டிலும் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துதல் போன்ற விவசாயிகளைக் கவரும் திட்டங்களையே மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய அருண் ஜேட்லி, "எங்களுடைய அரசு விவசாயிகளின் நலன்களைக் காக்க உறுதியேற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வருவாயை 2022ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளார். உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் உற்பத்திக்கான நல்ல விலையைப் பெறவும் தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும். நடப்புப் பருவத்தில் உற்பத்திக்கான செலவை விட 50 சதவிகிதம் கூடுதலான குறைந்தபட்ச ஆதார விலை பயிர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'ஆபரேஷன் கிரீன்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வேளாண் உற்பத்தி அமைப்புகள் மற்றும் லாஜிஸ்டிக் வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வேளாண் கடன் மதிப்பை 11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித் தொழில், மீன் வளர்ப்பு, கால்நடைகள் வளர்ப்பு மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றை மேம்படுத்த ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலும், பல்வேறு மாநில சட்ட மன்றத் தேர்தல்களும் நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில் விவசாயிகளின் விவசாயிகளை வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்ற முழக்கத்தைத் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கிறது பாஜக அரசு. உற்பத்திக்கான விலை கூட கிடைக்காமல் வருவாயே இன்றி நெருக்கடியான சூழலுக்கு கடந்த பருவத்தில் விவசாயிகள் தள்ளப்பட்டதை நாம் கண்டோம். நடப்புப் பருவத்திலும் விலை பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழாக விலை சரிந்துவரும் சூழல் நிலவுகிறது. 2022ஆம் ஆண்டுக்கு இன்னமும் நான்கு ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க எந்தவிதமான சீரிய முயற்சியையும் எடுக்காமல் விவசாயிகளின் வருவாயை அதிகரிப்போம் என்று வெற்று முழக்கத்தை மட்டும் முழங்கிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஆண்டுக்கு 10.04 சதவிகிதம் வருவாய் உயர்வை எட்டினால் மட்டுமே 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்ட இயலும் என்று டல்வாய் கமிட்டி அறிக்கை கூறுகிறது. 2012-13ஆம் நிதியாண்டு முதல் 2016-17ஆம் நிதியாண்டு வரையில் விவசாயிகளின் வருவாய் வளர்ச்சி என்பது தோராயமாக ஆண்டுக்கு 2.5 சதவிகிதமாகவே உள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 2.5 சதவிகித வளர்ச்சியிலிருந்து 10.4 சதவிகித வளர்ச்சி இலக்கை அடைதல் என்பது உண்மையிலேயே மிகவும் சவாலான ஒன்றாகும். நான்கு ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து விவசாயிகளின் வருவாயைப் அதிகரிக்க முடியாத மோடி அரசு இந்த ஒரு ஆண்டில் இதற்கான திட்டங்களைச் செயல்படுத்திவிடுமா?

தகவல்கள் பிசினஸ் லைன்

-பிரகாசு

-சுமித்ரா

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 6 பிப் 2018