மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

சிறப்புத் தொடர்: தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள்- 32: ரோஜர் ஃபெடரர்

சிறப்புத் தொடர்: தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள்- 32: ரோஜர் ஃபெடரர்

நித்யா ராமதாஸ்

விளையாட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரை ஒரு சில விளையாட்டுகள், ஒரு சில வீரர்கள் மட்டுமே அந்தப் போட்டிகளைக் கண்டு களிக்கக்கூடிய விதமாக மாற்றக்கூடியவர்கள். வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாது, ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் மீது அதிகபட்ச ஆர்வமும் பற்றும் மக்களுக்கு ஏற்படுத்தும் கூடுதல் பொறுப்பையும் சில வீரர்கள் தங்களது விளையாட்டு முறைகள் மூலம் செய்வதுண்டு. அதிலும் குறிப்பாக, இவரின் ஆட்டம் என்றால், டென்னிஸ் விரும்பிகள் தொலைக்காட்சி முன் தவறாமல் ஆஜராகிவிடுவதுண்டு. இவருடைய சமீபத்திய இருபதாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெற்றியைத் தங்களது வெற்றியாக பாவித்து, உலகெங்கிலும் உள்ள டென்னிஸ் விரும்பிகள் கொண்டாடினார்கள். இவரைப் பற்றி மேலும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

டென்னிஸ் ஆர்வம் தோன்றிய இளம் பருவம்

ரோஜர் ஃபெடரர், ஸ்விட்சர்லாந்து நாட்டின் பசேல் என்ற இடத்தில் ஆகஸ்ட் மாதம் 1981ஆம் ஆண்டில் பிறந்தார். ஸ்விஸ் மற்றும் பிரெஞ்சு வேர்கள் கொண்ட இவரது பெற்றோர் ராபர்ட் மற்றும் லினட் இருவரும் பொழுதுபோக்கிக்கிற்காக டென்னிஸ் விளையாடத் துவங்கினர். ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்த ரோஜரின் பெற்றோர், அலுவலக வளாகத்திற்குள் அப்போது புதிதாக அமைக்கப்பட்ட டென்னிஸ் மைதானத்தில் சென்று விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அவர்களுடன் உடன் சென்ற ரோஜருக்குப் பார்த்தவுடனே டென்னிஸ் ஈர்ப்பாக இருந்தது என்றே சொல்லலாம். மட்டை வைத்து பந்தை விளையாட்டாக முதன் முதலில் தட்ட ஆரம்பித்த போது, ரோஜருக்கு ஒன்றரை வயது என்று அவரது தாயார் லினட் நினைவுகூர்கிறார். நான்கு வயதுச் சிறுவனாக, ரோஜர் சுவர் அல்லது நெட்டின் மீது பந்துகளைத் தட்டித் தானாகவே பயிற்சி செய்யத் துவங்கினார். விளையாட்டு, உடற்பயிற்சி என்று மேலோட்டமாக மற்றவர்களால் பார்க்கப்பட்டாலும், படிப்பைக் காட்டிலும் ரோஜரின் கவனம் விளையாட்டுகளில் அதிகமாகச் சென்றது. பனிச்சறுக்கு, ஓட்டம், போன்ற தடகள போட்டிகளிலும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார் ரோஜர்.

விளையாட்டுப் போட்டிகளில் சேர்ந்ததன் விளைவாக, வென்றே தீர வேண்டும் என்ற உத்வேகம் ரோஜருக்குப் படிப்படியாக உருவெடுத்தது என்று அவரது பெற்றோர்கள் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடுகின்றனர். ரோஜருடைய போட்டிக் குணம் அவ்வப்போது வீட்டில் குடும்பத்துடன் விளையாடும் சிறு பலகை விளையாட்டுகளிலும் காணப்பட்டது. முழுச் சிந்தனையும், கவனமும், சேர்த்து அந்த விளையாட்டுகளை விளையாடியதாகவும், தோல்வியை நோக்கிச் செல்லும்போது வருத்தமடைந்து பின்பக்கம் சென்று டென்னிஸ் மட்டை கொண்டு, சுவரில் பந்து வீசி விளையாடுவதையும் ரோஜரின் பெற்றோர் அடிக்கடி பார்த்திருக்கிறார்கள்.

ரோஜரின் டென்னிஸ் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக, அவருடைய பயிற்சி நேரங்களில் இருவரும் உறுதுணையாகவே இருந்தனர். தாயார் லினட், உள்ளூர் டென்னிஸ் விளையாட்டு மையங்களில் சில பொறுப்புகளையும் வகித்தமையால், அவருடன் சேர்ந்து சிறுவன் ரோஜர் அந்த மையங்களில் விளையாடத் துவங்கினார்.

பயிற்சிகளும், ஆரம்ப காலத் தோல்விகளும்

எட்டு வயதுச் சிறுவனான ரோஜர், பசேல் நகர மையத்தில் சேர்ந்து பயிற்சி எடுக்கத் துவங்கினார். நண்பர்களுடன் சேர்ந்து மையத்தில் மாதிரிப் போட்டிகள் மற்றும் பயிற்சிப் போட்டிகளில் முனைப்புடன் விளையாடிய ரோஜரை இன்றும் பலர் நினைவுகூர்வது குறிப்பிடத்தக்கது. மற்ற மாணவர்களைக் காட்டிலும், மட்டை வீச்சில் லாவகமும் பந்தை அடிக்கும் வேகமும் ரோஜருக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்தன. ''மற்ற மாணவர்களுக்குப் புது யுக்திகளைக் கற்றுதந்தால், அதைச் சரியாகப் பிடித்துக்கொண்டு பயிற்சி செய்ய அவர்களுக்குச் சில வாரங்கள் எடுக்கும். ஆனால், ரோஜரைப் பொறுத்தவரை வெறும் 2 அல்லது 3 முயற்சிகளிலேயே அந்த யுக்திகளைக் கற்று வேகமாகச் செயல்படுத்தும் திறன் அதிகமாக இருந்தது'' என்று ரோஜரின் தொடக்க காலப் பயிற்சியாளர் அடோல்ஃப் கவோஸ்கி குறிப்பிடுகிறார்.

சிறந்த முறையில் பயிற்சிகளை எடுத்தாலும், ஆரம்பத்தில் சில போட்டிகளில் ரோஜர் தோல்விகளையே தழுவினார். தோல்விகள் அவருக்கு பாதிப்பைவிடவும் கோபத்தையே அதிகமாக ஏற்படுத்தின. “'விளையாட்டைச் சரியாகவும், பொறுப்பாகவும் விளையாட வேண்டும் என்ற அதிகப்படியான ஆர்வத்தையும் கட்டாயத்தையும் ரோஜர் தானாகவே ஏற்படுத்திக்கொண்டான். சில சமயங்களில் அந்தக் கட்டாயம் அரங்கில் சிதறும்போது, கோபப்பட்டு மட்டையை வீசி எறிவது போன்ற செயல்களைச் செய்வதுண்டு. அந்தச் சமயத்தில் நான் குறுக்கிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்'' என்று கவோஸ்கி கூறியிருக்கிறார்.

பசேல் நகரில் மையத்தில் பயிற்சி எடுத்துக்கொண்ட சமயத்தில் சில உள்ளூர் போட்டிகளிலும், பள்ளி சுற்றுகளிலும் ரோஜர் சிறு சிறு வெற்றிகளை அடைந்தாலும், முழு நேர டென்னிஸ் வீரராக ஆக வேண்டும் என்ற முனைப்பு இருக்கவே செய்தது. ரோஜருடைய அந்த ஆர்வத்தை அடிக்கடி வெளிப்படையாக நண்பர்களுடன் பகிரவும் செய்தார். “பள்ளி மற்றும் க்ளப் போட்டிகளில் விண்ணப்பப் படிவங்கள் எழுதும்போது, லட்சியங்களைப் பற்றி எழுதும் கட்டம் ஒன்று தரப்பட்டிருக்கும். அதில் நாங்கள் சிறந்த வீரராக வர வேண்டும் என்று பொதுவான விருப்பங்களை தொகுத்து எழுதுவதுண்டு. ஆனால் ரோஜர், உலகின் சிறந்த 10 வீரர்களுள் ஒருவராக வர வேண்டும். அதன் பின் உலகின் சிறந்த வீரராக விளங்க வேண்டும் என்றே குறிப்பிடுவார். சில சமயங்களில், தான் உலகின் முதல் இடத்தைப் பிடிப்பதாக நண்பர்களுடனும், பயிற்சியாளரிடமும் கூறுவார். அன்று நாங்கள் எல்லாரும் அதைக் கேட்டுச் சிரிப்போம்'' என்று கவோஸ்கி குறிப்பிடுகிறார்.

ஸ்விட்சர்லாந்தில் மார்ட்டினா ஹிங்கிஸ் போன்ற வீராங்கனைகள் உலக அரங்கில் கொடி கட்டிப் பறந்த அதே வேளையில், ரோஜருடைய திறமையைப் பல பேர் கண்டுகொள்ளாமலேயே வெகு நாட்கள் கழிந்தன. ரோஜர் விளையாடும் விதம் சரியாக இருந்தாலும், உலகின் முதல் வீரராக அவர் வருவார் என்ற எந்த எதிர்பார்ப்பும் அவரது பயிற்சியாளர்களுக்குக்கூட இருந்ததில்லை. தனக்கான கவனத்தை யாரும் தர வில்லை என்றாலும், ரோஜர் தனது கனவை நினைவாக மாற்றத் தேவையான அனைத்துச் செயல்களிலும் கச்சிதமாக ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்விட்சர்லாந்திலிருந்து கிராண்ட் ஸ்லாம் வரை

பிறந்த இடமான பசேல் நகரை விட்டு இக்ளூன்ஸ் என்ற இடத்திற்கு இரண்டு ஆண்டு பிரத்யேகப் பயிற்சி எடுத்துக்கொள்ளச் செல்ல வேண்டிய முடிவை ரோஜர் எடுத்தார். 15 வயதுச் சிறுவனான மகனை விட்டுப் பிரியப் பெற்றோர்கள் சம்மதித்தாலும் வேறொரு குடும்பத்துடன் தங்க வேண்டும் என்ற சூழல் ரோஜருக்கு சற்று நெருடலாகவே இருந்தது. தனது லட்சியத்தை மட்டும் கருத்தில் கொண்டு, இக்ளூன்ஸ் சென்ற ரோஜர், ஆரம்பத்தில் சில சிக்கல்களைச் சந்தித்தார். “புதிதாக ஒரு குடும்பத்தில் இணைந்து வசிப்பது எனக்கு மிகவும் புதிது. வீட்டு ஞாபகங்கள், பெற்றோரைப் பிரிந்திருப்பது போன்ற பல விஷயங்கள் எனக்கு ஆரம்பத்தில் கடினமான நாட்களை மட்டுமே தந்தன'' என்று சில நேர்காணல்களில் ரோஜர் பகிர்ந்துகொண்டுள்ளார். ரோஜரின் இந்த சூழல் பயிற்சி மற்றும் பள்ளிப் பாடங்களில் குறுக்கீடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. போதிய கவனமும், முறையான உணவும் எடுத்துக்கொள்ளாமல் பயிற்சியின் ஆரம்ப நாட்களை ரோஜர் கழித்ததாக அவர் தங்கியிருந்த குடும்பத்தார் பகிர்ந்துகொண்டனர்.

தற்காலிகமான இந்தத் தடங்கலை எளிதாகக் கடந்து, போட்டிகளில் முழு கவனத்தை செலுத்தலானார் ரோஜர். இக்ளூன்ஸ் மையத்தில் தரப்பட்ட பிரத்யேகப் பயிற்சி, ரோஜரின் அபாரமான திறனுக்குக் கூடுதல் பலமாக இருந்தது என்று சொல்லலாம். தனது 16 மற்றும் 17 வைத்து வயதில் ஸ்விட்சர்லாந்தில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளை வென்று வளரும் நட்சத்திரம் என்று பலரால் போற்றப்பட்டார். தேசிய போட்டிகளில் கிடைத்த சில தொடர் வெற்றிகள் ரோஜரை உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகளை அளித்தது. குறிப்பாக, ATP தொடர் போட்டிகளில் விளையாடுவதற்காக பிரான்ஸ் செல்லும் வாய்ப்பு கிட்டியது. அந்தத் தொடர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியது மட்டுமல்லாது, பரிசுத் தொகை வென்று டென்னிஸ் மூலம் சம்பாதிக்கவும் முடியும் என்று முதலில் ரோஜர் தெரிந்துகொள்ள வாய்ப்பாவும் அந்தத் தொடர் அமைந்தது.

இறுதிச் சுற்று வரை விளையாடி வென்ற ரோஜர், அடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்று விளையாடத் துவங்கினார். அமெரிக்காவின் மியாமி நகரில் சென்று அண்ட்ரி அகாஸியுடன் விளையாடி தோல்வியை எதிர்கொண்டது, ரோஜருக்குப் பெரிய சறுக்கலாகத் தென்பட்டது. பல வெற்றிகளுக்குப் பின் கிடைத்த இந்தத் தோல்வி ரோஜருக்குத் தன்னம்பிக்கையைக் குறைக்கும் விதமாகப் பார்க்கப்பட்டது. இருப்பினும், ஸ்விட்சர்லாந்து விதிகளுக்கேற்ப பள்ளிப் படிப்பை முடித்த பின் சிறிது காலம் ராணுவப் படையில் சேர்ந்தார் ரோஜர். பின், மீண்டும் டென்னிஸ் கனவை நிறைவேற்றும் எண்ணத்துடன் மைதானத்தில் அடி எடுத்து வைத்தார் ரோஜர்.

வாழ்க்கையின் 'செகண்ட் இன்னிங்ஸ்' என்று சொல்லக்கூடிய அளவிற்கு ரோஜரின் வாழ்க்கை மாறியது. கோபத்தைப் பெருமளவில் குறைத்துக்கொண்டு, கண், உடல் ஒருங்கிணைப்பை மேலும் மெருகேற்றி ஒலிம்பிக் மற்றும் ஜூனியர் ஆஸ்திரேலிய ஓபன் தொடர் போட்டிகளில் பங்குகொண்டார். இப்போட்டிகளில் மூலம் பலர் கவனத்தைத் தன பக்கம் எளிதாக இழுத்தார். அரை இறுதிச் சுற்று வரை சென்று, அன்றைய முன்னணி வீரர்களுக்கு இணையாகவும், எதிராகவும் அரங்கில் தனக்கென ஒரு முத்திரையைப் பதிக்கலானார். சிட்னி, ஏதன்ஸ், போன்ற பல ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமல்லாது, டேவிஸ் கோப்பை, விம்பிள்டன், அமெரிக்க, ஆஸ்திரேலிய ஓபன் தொடர்கள் போன்ற பல போட்டிகளில் பங்கேற்று அரையிறுதி, இறுதிச் சுற்று வரை போட்டியில் நின்று விளையாடினார் ரோஜர்.

வேகமான மட்டை வீச்சு, அரங்கில் எல்லா இடங்களுக்கும் சென்று பந்தைத் தட்டுவது, கை, கண், உடல் ஒருங்கிணைப்பு போன்ற பல அம்சங்கள் ரோஜருக்குப் பக்கபலமாக இருந்தன. பல வெற்றிக் கோப்பைகளையும் ஏகப்பட்ட பரிசுத் தொகைகளையும் பெற்ரார். உலகத் தர வரிசைப் பட்டியலில் படிப்படியாக முன்னேறினார். 2003ஆம் ஆண்டில் அடைந்த முதல் கிராண்ட் ஸ்லாம் வெற்றி ரோஜரை உலகத் தர வரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கச் செய்தது. அன்றிலிருந்து, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் சில தடங்கல்கள், தோல்விகளை எதிர்கொண்டாலும், முழு முனைப்புடன் ஒவ்வொரு விளையாட்டையும் சிரத்தையுடன் விளையாடும் ரோஜரின் தன்மைக்குப் பல ரசிகர்கள் குவிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டில் லண்டனின் புகழ்பெற்ற லண்டன் ஸ்கூல் ஆஃப் மார்க்கெட்டிங் என்ற கல்லூரியில், சிறந்த விளையாட்டு நட்சத்திரம் என்று ஃபெடரரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையிலும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார். டென்னிஸ் போட்டி, விளம்பரங்கள் என்று இவருடைய மதிப்பு கிட்டத்தட்ட 100.8 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ரோஜர் ஃபெடரர் ஃபவுண்டேஷன் என்று தொண்டு நிறுவனம் அமைத்து அதன் மூலம், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அவ்வப்போது பண உதவி செய்துவருகிறார். சேவை மற்றும் தொண்டு செய்யும் ரோஜரின் மனப்பான்மையைப் பாராட்டும் வகையில், பசேல் நகரப் பல்கலைக்கழகம் களரவ டாகடர் பட்டம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கனவு, அதை மட்டுமே நோக்கிய பயணம், அதற்குக் கிடைத்த வெற்றி என்ற ஒற்றை வரியில் ரோஜரின் வாழ்க்கை அடங்கியுள்ளது. எல்லோரும் கேலி செய்தாலும், பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்தாலும், தன்னுடைய கனவை நனவாக்கத் தான் மட்டுமே உழைக்க முடியும் என்ற மிகச் சிறந்த பாடத்தை தனது வாழ்க்கையில் கற்றதுடன், தொடர் வெற்றிகள் மூலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கும் ரோஜர் கற்றுத்தருகிறார். இந்த இருபதாவது கிராண்ட் ஸ்லாம் வெற்றியை அந்தப் பாடத்தின் மற்றுமொரு பகுதியாகவே நம்மால் பார்க்க முடிகிறது.

கட்டுரையாளர் குறிப்பு:

நித்யா ராமதாஸ், அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். லைஃப் ஸ்டைல், ஃபேஷன், கலை மற்றும் மியூசிக் சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் தேர்ந்தவர். தற்பொழுது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 6 பிப் 2018