மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

வைரமுத்து கட்டுரை வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்றம்!

வைரமுத்து கட்டுரை வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்றம்!

கவிஞர் வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த கட்டுரைக்குத் தடை கோரிய வழக்கை, தமிழ் தெரிந்த நீதிபதி அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி சார்பில் கடந்த மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பேசிய வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக தகவல் வெளியானது. இது கட்டுரையாக தினமணி நாளிதழிலும் வெளிவந்தது. இதனை எதிர்த்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்டதால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் வைரமுத்து எழுதிய தமிழை ஆண்டாள் கட்டுரைக்குத் தடை விதிக்க உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர்கள் மொய்தீன் இப்ராகிம், ஜி.பிரபு மற்றும் விக்டர், கே.வி.எஸ்.கண்ணன் ஆகியோர் கூட்டாகத் தாக்கல் செய்த இந்த மனு நேற்று (பிப்ரவரி 5) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சமூக வலைதளங்களில் ஆண்டாள் கட்டுரை குறித்து கருத்து தெரிவிப்பதாகத் தொடர்ந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துவருகின்றனர். எனவே ஆண்டாள் குறித்த கட்டுரைக்குத் தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இதற்கு தலைமை நீதிபதி, "எனக்குக் கொஞ்சம் கொஞ்சம்தான் தமிழ் தெரியும். ஆண்டாள் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தர முடியுமா?” என்று கேட்டார். அதற்கு மனுதாரர் தரப்பிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது கடினம் என்று கூறப்பட்டது. மற்றொரு நீதிபதி அப்துல் குத்தூஸ் தனக்குத் தமிழ் தெரிந்தாலும் ஆண்டாள் குறித்து முழுமையாகத் தெரியாது என்றார்.

இதையடுத்து "மதரீதியான கருத்துகள் மிக உணர்வுபூர்வமானவை. யாராக இருந்தாலும் மத ரீதியாகப் புண்படுத்தும் கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது. நான் ஆண்டாள் குறித்து வீக்கிபீடியாவில் தேடித்தான் தெரிந்துகொண்டேன். எனவே இந்த வழக்கைத் தமிழ் தெரிந்த நீதிபதி அமர்வுக்கு மாற்றினால் நன்றாக இருக்கும்” என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். இதையடுத்து வழக்கு நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 6 பிப் 2018