மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

இலங்கையைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

இலங்கையைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

தமிழக மீனவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தில் மீன்பிடி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக இலங்கை அரசு திரும்பப் பெற வேண்டுமென்று கோரி, இன்று (பிப்ரவரி 6) தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

கடந்த மாதம், இலங்கை நாடாளுமன்றத்தில் மீன் பிடிப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனால், இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் மீனவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கும் நிலை உண்டாகும். இது, வழக்கத்தை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழக மீனவர்கள் கடல் எல்லை தாண்டியதாகக் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தற்போது வரை தொடர்ந்துவருகிறது.

இதனை மேலும் அதிகப்படுத்தும் நடவடிக்கையாகவே, இம்மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தன தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள். தமிழக அமைச்சர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 6) தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. கடந்த 30ஆம் தேதியன்று நடப்பதாக இருந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டம், இன்று நடக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் எம்.கஜநாதன் தலைமையில் இது நடைபெறவுள்ளது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

இலங்கை அரசு அந்த மசோதாவை திரும்பப் பெறுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டுமென்றும், இலங்கை அரசு ஏற்கனவே பிடித்து வைத்துள்ள 170க்கும் மேற்பட்ட விசைப்படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்றும், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள், பிரிவு மற்றும் முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் என அனைவரும் கலந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா.

இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே வேண்டுகோளுக்கிணங்க, இன்று இலங்கை நாடாளுமன்றம் அவசரமாகக் கூடவுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 6 பிப் 2018