மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு போன் போட்ட தினகரன்

டிஜிட்டல் திண்ணை:  எடப்பாடிக்கு போன் போட்ட தினகரன்

மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப்பில் இருந்து வந்து விழுந்தது மெசேஜ்.

“முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆரம்ப காலத்தில் இருந்து உதவியாளராக இருப்பவர் கார்த்தி. சேலம் பக்கம்தான் கார்த்திக்கு சொந்த ஊர். எடப்பாடியின் உறவினர்கள் தொடங்கி நண்பர்கள் வரை எல்லோருக்கும் கார்த்தியை தெரியும். எல்லாவற்றையும் தாண்டி, கார்த்தியின் செல்போனில் தொடர்பு கொண்டுதான் முதல்வரிடம் பேசவே முடியும். கடந்த ஒரு மாதமாகவே முதல்வரை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை என சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

‘கார்த்திக்கு எப்போ போன் பண்ணினாலும் அண்ணன் இப்போ பிசியா இருக்காரு. அவரு ஃப்ரீ ஆனதும் நானே கால் பண்ணித் தரேன்!’ என்ற பதிலை மட்டுமே எல்லோருக்கும் சொல்லி வருகிறாராம் கார்த்தி. ஆனால், யாருக்கும் திரும்ப போன் பண்ணுவதே இல்லையாம். குறிப்பாக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து அவரோடு வழக்கமாகப் பேசுபவர்கள், உறவினர்கள் என பலரும் கார்த்தியை தொடர்பு கொண்டபடியே இருந்தார்களாம். ஆனால், யாருடைய போனையும் முதல்வரிடம் கொடுக்கவே இல்லையாம் கார்த்தி. ‘அண்ணன் பிஸி...’ என்ற பதிலைக் கேட்டு போன் செய்பவர்களே நொந்துபோய் விட்டார்களாம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக டிடிவி தினகரனிடம் இருந்து கார்த்திக்கு போன் போயிருக்கிறது. ‘நான் எடப்பாடிகிட்ட பேசணும். போனை அவருகிட்ட கொடுங்க...’ என்று தினகரன் சொன்னதாக சொல்கிறார்கள். அதற்கு கார்த்தி, ‘ அண்ணன் இப்போ பிஸியாக இருக்காரு. நான் கால் பண்ணித் தரேன் சார்...’ என சொல்லி இருக்கிறார் ஆனால், திரும்ப கால் வரவில்லை. மறுபடியும், அன்று இரவு தினகரனிடம் இருந்து போன் போயிருக்கிறது. அப்போதும் அதே பதிலை சொல்லி இருக்கிறார் கார்த்தி. மறுநாள் காலையில் தினகரன் போனைப் போட்டபோதும், கார்த்தியிடம் இருந்து அதே பதில் வந்திருக்கிறது. டென்ஷன் ஆகிவிட்டாராம் தினகரன்.

‘என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? நாங்க என்ன வேலை வெட்டி இல்லாமல் இருக்கோமா? போன் பண்ணினால் அவருகிட்ட கொடுக்க வேண்டியதுதானே... அப்படி என்ன அவரு பிஸியா இருக்காரு? நீ தனியா அரசியல் பண்ணிட்டு இருக்கியா?’ என கார்த்தியை வறுத்தெடுத்து விட்டாராம் தினகரன். கார்த்தி பதில் எதுவுமே சொல்லாமல் போனை வைத்துவிட்டாராம்.

தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘எனக்கு போனை கொடுக்கிறதுக்கு என்ன? அண்ணன் யாருகிட்ட பேசணும்னு நினைக்கிறாரோ அவங்ககிட்டதானே பேசுவாரு.. இவங்ககிட்ட எல்லாம் பேசுங்கன்னு நான் என்ன அவரை கட்டாயப்படுத்தியா போனை கொடுக்க முடியும். யாரெல்லாம் போன் பண்ணினாங்கன்னு நான் அவருகிட்ட லிஸ்ட் கொடுப்பேன். அவரு யாருக்கு திரும்ப போன் போட்டு தரச் சொல்றாரோ அவங்களுக்குதானே போன் பண்ணி கொடுக்க முடியும். இது புரியாம எல்லோரும் என்கிட்ட சத்தம் போடுறாங்க...’ என்று தன் நிலையைச் சொல்லிப் புலம்பியிருக்கிறார் கார்த்தி.

எடப்பாடியின் மனைவியிடம் அவரது உறவினர்கள் சிலரும் கூட, ‘அவருகிட்ட போன் பேசலாம்னு பண்ணினால், கார்த்தி கொடுக்கிறதே இல்லை..’ என புகார் சொல்லி இருக்கிறார்கள். ‘நான் என்னணு விசாரிக்கிறேன்..’ என்று சொல்லி இருக்கிறார் எடப்பாடி மனைவி” என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 5 பிப் 2018