மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

பார் கவுன்சில் தேர்தல்: தெளிவில் தொடங்கிய குழப்பம்!

பார் கவுன்சில் தேர்தல்:  தெளிவில் தொடங்கிய  குழப்பம்!

தமிழ்நாடு பார் கவுன்சிலின் இடைக்கால நிர்வாகக் குழு கடந்த 24-ம் தேதி மேற்கொண்ட முடிவுகள் வர இருக்கும் பார் கவுன்சில் தேர்தலுக்குப் பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனபோதும் பார் கவுன்சில் தேர்தல் பற்றி இன்னும் குழப்பம் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

பார் கவுன்சில் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், தமிழ்நாடு பார் கவுன்சில் இடைக்கால நிர்வாகக் குழு விதித்த புதிய நிபந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தியது பற்றி இன்று(பிப்ரவரி 5) காலை மின்னம்பலம் 7 மணி பதிப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். பார் கவுன்சில் தேர்தல்: முட்டுக்கட்டைகள் முறிக்கப்படுமா? என்ற தலைப்பிலான அந்த செய்தியில், ‘இடைக்கால நிர்வாகக் குழு விதித்திருக்கும் புதிய நிபந்தனைகள் செல்லுமா என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கும்’ என்றும் தெரிவித்திருந்தோம்.

அதன்படியே இன்று காலை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதில் அப்துல் குத்தூஸ் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் முதல் வழக்காக இந்த வழக்கு வந்தது.

’’பத்து ஆண்டுகள் வழக்கறிஞர்களாக இருப்பவர்களே பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட முடியும், இருமுறை பொறுப்பில் இருந்தவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிட முடியாது, அரசியல் கட்சிகளில் பொறுப்புகளில் இருப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகள் போட்டியிட முடியாது’ என்பன உள்ளிட்ட ஏழு புதிய நிபந்தனைகளை உருவாக்கியது தமிழக பார் கவுன்சில் இடைக்காலக் குழு. இதை எதிர்த்துதான் வழக்குத் தொடரப்பட்டது.

இன்று காலை 11.30 க்கு தலைமை நீதிபதி அமர்வு தொடங்கியபோது முதல் வழக்காக பார் கவுன்சில் வழக்கு இருந்தது. ‘தீர்ப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது. கொஞ்ச நேரத்தில் தீர்ப்பு வந்துவிடும்’ என்று தகவல் கிடைக்க வழக்கறிஞர்கள் ஆர்வமாகக் காத்திருந்தனர்.

நீதிமன்றத்துக்கு அகில இந்திய பார்கவுன்சில் தரப்பு வழக்கறிஞரும் வந்திருந்தார். அவரிடம், ‘தமிழக பார் கவுன்சில் இடைக்கால குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தில் என்ன முடிவெடுத்தீர்கள்?’ என்று கேட்டனர் நீதிபதிகள். அதற்கு அவர், ‘அகில இந்திய பார் கவுன்சில் நேற்று நடத்திய கூட்டத்தின் அஜெண்டாவில் இருந்து இந்த விவகாரத்தை நீக்கிவிட்டோம். அதனால் இதுபற்றி நேற்று முடிவேதும் எடுக்கப்படவில்லை’ என்று தெரிவித்தார். இதைப் பதிவு செய்துகொண்டது நீதிமன்றம்.

இந்நிலையில் பகல் 12.30-க்கு தீர்ப்பு வாசிக்கப்பட்டது. பொதுவாகவே தீர்ப்பின் கடைசி பக்கம் மட்டுமே நீதிபதியால் வாசிக்கப்படும். ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பின் அத்தனை பக்கங்களையும் வாசித்தார் நீதிபதி.

இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் என்ன சொல்கிறது, அகில இந்திய பார் கவுன்சில் விதிகள் என்ன சொல்கின்றன, இரு தரப்பு வாதங்கள் என்னென்ன ஆகியவற்றை எல்லாம் தீர்ப்பில் சுட்டிக் காட்டிய நீதிபதிகள்,

“மாநில பார் கவுன்சில் தானாகவே முடிவெடுக்க அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. அதேநேரம் கேரள உயர் நீதிமன்றம், ‘மாநில பார் கவுன்சில்களுக்கும் விதிகளைத் திருத்தக் கூடிய அதிகாரம் இருக்கிறது. ஆனால் அவை அகில இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதுவரை மாநில பார்கவுன்சில் இயற்றிய விதிகள் நடைமுறைக்கு வராது’ என்று சொல்லியிருக்கிறது. ஆகவே மாநில பார் கவுன்சிலுக்கு விதிகளைத் திருத்த அதிகாரம் இருந்தாலும் , அகில இந்திய பார் கவுன்சில் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே இந்த தேர்தல் விதிகள் இப்போது பொருந்தாது’’ என்று தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பு தெளிவாக இருந்தாலும் இதில் இன்னொரு குழப்பமும் தொடங்கியிருப்பதாகக் கருதுகின்றனர் வழக்கறிஞர்கள். அதென்ன?

‘’தமிழக பார் கவுன்சில் இடைக்காலக் குழுவின் புதிய நிபந்தனைகளுக்கு அகில இந்திய பார் கவுன்சில் ஒப்புதல் தராததை சுட்டிக்காட்டியே இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உயர் நீதிமன்றம். ஒருவேளை தமிழக பார் கவுன்சில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் எல்லாம் முடிந்து மனு பரிசீலனைக்கு முன்பாக... அகில இந்திய பார் கவுன்சில் கூடி இந்த புதிய நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டால், இவை உடனடியாக நடைமுறைக்கு வந்துவிடக்கூடும். அப்போது பல ஆயிரம் வழக்கறிஞர்கள் தேர்தலில் நிற்க இயலாத சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். இது நடக்கும் என்றும் சொல்ல முடியாது, நடக்காது என்றும் நம்ப முடியாது’’ என்கிறார்கள் குழப்பமாக.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 5 பிப் 2018