மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: ஒலிம்பிக்கில் தொடங்கும் மூன்றாம் உலகப் போர்!

சிறப்புக் கட்டுரை: ஒலிம்பிக்கில் தொடங்கும் மூன்றாம் உலகப் போர்!

சிவா

சர்வதேச நாடுகளுக்கிடையே நிலவும் தொழில், பொருளாதார, பாரம்பரியப் போட்டிகளையெல்லாம் கடந்தது ஒலிம்பிக் போட்டி. ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்குமான உலக அங்கீகார மேடையாக விளங்கும் ஒலிம்பிக்கில் போட்டியைப் போலவே கட்டுப்பாடுகளும் பாதுகாப்பும் மிகக் கடினமானவை. ஆனால், அந்தக் கடினத்தை ஒன்றுமில்லாத செல்லாக்காசாகக் கருத முடியுமென்றால் அது எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கண் முன்னே வெளிச்சம்போட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் 2018 பியாங்செங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடு.

2016ஆம் ஆண்டு ‘ரிச்சர்டு மெக்லரன் விசாரணைக் குழு’ சமர்ப்பித்த ஆவணங்கள்தான், இப்போது ஒலிம்பிக் அமைப்பு சைபர் தாக்குதலுக்கு பயந்து நடுங்கிக்கொண்டிருப்பதற்குக் காரணம். ஆம், உலக நாடுகளின் சிறந்த அறிவாளிகளும், திறமைசாலிகளும் இடம்பெற்றிருக்கும் ஒலிம்பிக் கட்டமைப்பையே சைபர் தீவிரவாதிகள் ஆட்டம்காண வைத்திருக்கின்றனர். பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகளின் மெடிக்கல் ரிப்போர்ட் மற்றும் உடல்தகுதி ரிப்போர்ட்களைத் திருடி, இணையத்தில் வெளியிட்டு, ஒலிம்பிக்கின் கெட்ட கனவாக மாறியிருக்கின்றனர் Fancy Bear சைபர் தீவிரவாதிகள்.

2016ஆம் ஆண்டு கிரிகோரி ரெச்சென்கோவ் வெளியிட்ட தகவல்களால் அதிர்ந்துபோனது ஒலிம்பிக் உலகம். 2005 முதல் 2015 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷிய ஒலிம்பிக் வீரர்களுக்கு ரஷிய அரசின் சார்பிலேயே, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் கொடுக்கப்பட்டதும், ஒலிம்பிக் தேர்வுக்குப் பரிசோதனை செய்யப்பட்டபோது சிறுநீர் மாதிரிகளை மாற்றியதையும் ரஷியாவின் ஊக்கமருந்து பரிசோதனை நிலையத்தின் இயக்குநராகப் பணியாற்றிய கிரிகோரி வெளிப்படையாக அறிவித்தார். அவருடன் ரஷிய ஊக்கமருந்து பரிசோதனை நிலையத்தில் பணியாற்றிய அவரது நண்பர் நிகிதா கமேவ் உள்ளிட்ட சில நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதும் கிரிகோரி அங்கிருந்து வெளியேறி இந்தத் தகவல்களை வெளியிட்டு இப்போது அமெரிக்காவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறார்.

கிரிகோரியின் அறிவிப்பை அடிப்படையாக வைத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரிச்சர்டு மெக்லரன் தலைமையிலான அணியை ரஷியாவுக்கு விசாரணைக்காக அனுப்பி வைத்தது. மெக்லரன் ரஷியாவில் கால் பதித்த சில நாட்களிலேயே பரிசோதனை மாதிரிகள் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். விளையாட்டு வீரர்களிடமிருந்து பெறப்படும் மாதிரிகளை ஒருமுறை மட்டுமே உடைத்துத் திறக்கக்கூடிய பாட்டில்களில் அடைத்து ரஷியப் பரிசோதனை நிலையத்தில் பாதுகாப்பாகச் சேர்த்துவிட்டு கிளம்பியிருக்கின்றனர் ஒலிம்பிக் அதிகாரிகள். ஆனால், அந்த பாட்டில்களை உடைக்காமல் திறந்து, மாதிரிகளை மாற்றக்கூடிய கருவியைக் கண்டுபிடித்து,மாதிரிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குப் பக்கத்து அறையிலேயே விளையாட்டு வீரர்களின் சிறுநீர் மாதிரிகள் மாற்றப்பட்டிருக்கின்றன.

இந்த விசாரணையின் முதற்கட்ட ஆவணங்களை 2016இல் மெக்லரன் சமர்ப்பித்தபோது, ரஷிய விளையாட்டு வீரர்கள் சிலர் மட்டும் 2016 ஒலிம்பிக் போட்டியிலிருந்து தடை செய்யப்பட்டனர். ஆனால், இரண்டாம் கட்டமாக 2017இன் தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், ரஷிய அரசாங்கத்தின் ஆதரவுடன்தான் இந்த குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன என்று மெக்லரன் ஆதாரத்துடன் நிரூபித்ததால், பல கட்ட ஆய்வுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு தென்கொரியாவிலுள்ள சியாங்பெங் மாகாணத்தில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலிருந்து ரஷியா முழுவதுமாக தடை செய்யப்பட்டது. மாதிரிகள் மாற்றப்பட்ட வீரர்களுக்கு வாழ்நாள் தடையையும் வழங்கியது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. ஊக்கமருந்து குற்றச்சாட்டில் சிக்காத வீரர்களாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளலாமே தவிர ரஷிய நாட்டின் பெயர், கொடியின் கீழ் யாரையும் அனுமதிப்பதில்லை என்ற கடுமையான முடிவை எடுத்தது. அதேசமயம், 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷிய நாட்டுக் கொடியும் அனுமதிக்கப்படாது என அறிவித்தது. ஒலிம்பிக் கமிட்டியின் இந்த அறிவிப்புக்கு ரஷியா இதுவரையிலும் எதிராகவே இருந்துவருகிறதே தவிர, அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்தக் குற்றம் நடைபெற்றதாக ஒப்புக்கொள்ளவில்லை.

மெக்லரன் அறிக்கையின்படி, 2014ஆம் ஆண்டு ரஷியாவின் சொச்சி மாகாணத்தில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக(மாதிரிகள் மாற்றப்பட்டதாக) சந்தேகப்பட்ட பலருக்கு வாழ்நாள் தடைவிதித்து ஆணையிட்டது ஒலிம்பிக் கமிட்டி. இந்த ஆணையை எதிர்த்து பலரும் விளையாட்டுகளுக்கான சர்வதேச நடுவண் நீதிமன்றத்தை நாடியபோது, இவர்களில் பலர் ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் சரிவர நிரூபிக்கப்படவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் சந்தேகம் இருப்பதால், 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு மட்டும் தடைவிதிக்கலாமே தவிர, வாழ்நாள் தடைவிதிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறது.

சைபர் தாக்குதல்

ஒரு பக்கம் இப்படி ரஷிய அரசாங்கமும், ஒலிம்பிக் வீரர்களும் சட்டப்படி நடவடிக்கைகளைச் சந்தித்துக்கொண்டிருக்க, ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளத் தடைவிதித்ததை ‘சர்வதேச அவமானம்’ எனக் கருதிய சில சைபர் தீவிரவாதிகளே, தொடக்கத்தில் குறிப்பிட்ட டிஜிட்டல் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

2016 ஒலிம்பிக்கில் ரஷிய வீரர்களின் ஒரு பகுதியினர் தடை செய்யப்பட்டபோது உலகலாவிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு மற்றும் ஒலிம்பிக்குடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளின் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் டிவைஸ்களை Fancy Bear என்ற சைபர் தீவிரவாத ஹேக்கர் குழு கைப்பற்றியது. அப்போது கிடைத்த தகவல்களிலிருந்து அமெரிக்காவின் சிறந்த டென்னிஸ் வீராங்கணைகளில் ஒருவரான செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்ட பலரது மருத்துவப் பரிசோதனை ஆவணங்களை இணையதளங்களில் வெளியிட்டது. இது ஒலிம்பிக் கமிட்டிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. ரஷியப் பரிசோதனை மையத்தின் இயக்குநர், தற்போது அமெரிக்காவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதால் இதற்குப் பின்னணியில் அமெரிக்காவின் சதி இருக்கிறதென நினைத்து, அமெரிக்க வீரர்களின் மருத்துவப் பரிசோதனை ஆவணங்களையே அதிகளவில் வெளியிட்டது Fancy Bear. இதில், அமெரிக்க வீரர்களில் பலர் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பினால் தடைசெய்யப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள் என ரஷிய சைபர் தீவிரவாதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், இந்த வாதம் எங்கும் எடுபடவில்லை. ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச ஊக்கமருந்து தடுப்புப் பிரிவு மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் எதிர்ப்புக்கு இந்த ஹேக்கர்கள் இலக்காகியுள்ளனர். எனவே, எங்கு, எப்படி ஹேக் செய்யப்பட்டு இந்தத் தகவல்கள் திருடப்பட்டன என்று கண்டுபிடிக்கும்படி உலகின் முன்னணி Anti-Virus நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, McAfee Anti-Virus நிறுவனம் ஒலிம்பிக் கமிட்டி மற்றும் அதைச் சார்ந்த அத்தனை அமைப்புகளின் இ-மெயில் மற்றும் இணையதள சர்வர்களை ஆய்வு செய்ததில், பல்வேறு டிரோஜான் வைரஸ்கள் அவற்றில் இருப்பது கண்டறியப்பட்டது. அதில் முக்கியமானது APT28 வைரஸ்.

சாதாரண இ-மெயிலில் வரும் அறிவிப்பை க்ளிக் செய்வதன் மூலமே, Background Processingஇல் குறிப்பிட்ட டிவைஸுக்குள் சென்று அமர்ந்துகொள்ளும் இந்த வைரஸ்கள், அந்த டிவைஸ் மூலம் நடைபெறும் வேலைகளை அவ்வப்போது அதன் தலைமைக்கு அனுப்பிவைக்கும்படி Coding செய்யப்பட்டிருக்கிறது. இதனைக் கண்டறிந்த ஒலிம்பிக் கமிட்டி அதிர்ச்சியில் உறைந்துபோய், அது சார்ந்த எல்லா கம்ப்யூட்டர், மொபைல், டேப்லட் மற்றும் லேப்டாப்களை McAfeeயின் பாதுகாப்புப் பிரிவிடம் கொடுத்தது. அதில், விளையாட்டு வீரர்களின் தகவல்களைத் திருடிய ரஷிய ஹேக்கர்கள் மட்டுமல்லாமல், வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்களும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இவர்களுக்கான காரணம் வேறு.

அபாயகரமான ‘கோல்டன் டிராகன்’

தென் மற்றும் வட கொரிய நாடுகளுக்கிடையேயான போட்டியும் போரும் உலகம் அறிந்தவை. இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெறும் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா தலையிடக் கூடாது என்பதனால் பலவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் பல்வேறு நாடுகளும் தங்களது பாதுகாப்புப் படையினரைத் தென்கொரியாவுக்கும் அனுப்பிவைத்தன. ஆனால், ஒலிம்பிக் போட்டியில் குழப்பம் விளைவிக்க வடகொரியாவைச் சேர்ந்தவர்கள் சைபர் தாக்குதலின் மூலம் தென்கொரியப் பாதுகாப்புப் படையை நிலைகுலையச் செய்துவைத்திருக்கின்றனர்.

வடகொரியாவின் பிரபல ஹேக்கர்கள் குழு உருவாக்கியிருக்கும் இந்த ஆபரேஷனுக்குப் பெயர் ‘கோல்டன் டிராகன்’. ஒலிம்பிக்கில் கொடுக்கப்படும் தங்க மெடல்களைப் பிடுங்கி, குழப்பத்தை விளைவிக்க புதுமாதிரியாக முயன்றிருக்கின்றனர். கோல்டன் டிராகன் வைரஸ், தென் கொரியாவிலிருக்கும் ஒலிம்பிக் கமிட்டியின் பல்வேறு டிவைஸ்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டி நடைபெறும்போது, அதில் வீரர்கள் பெறும் புள்ளிகளை மாற்றுவது, முடிவுகளை மாற்றிச் சொல்வது போன்றவற்றைச் செய்யும் விதத்தில் வைரஸை டிசைன் செய்திருக்கிறார்கள். அதீத பாதுகாப்பின்மை ஏற்பட்டால் ஒலிம்பிக் நடத்தும் பொறுப்பை தென்கொரியாவிடமிருந்து பிடுங்கிவிடுவோம் என்று ஒலிம்பிக் கமிட்டி முடிவெடுத்தபோது, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதாக உறுதி ஏற்றது தென்கொரியா. அப்படித்தான் செய்தது. ஆனால், வெடிகுண்டு, ராக்கெட் லாஞ்சர் ஆகியவற்றைத் தாண்டி டிஜிட்டல் முறையில் ஹேக் செய்து மிகப்பெரிய போரைத் தொடங்கியிருக்கின்றனர் வடகொரிய ஹேக்கர்கள்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 5 பிப் 2018