மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

மாநிலங்களவையில் அமித் ஷாவின் கன்னிப்பேச்சு!

மாநிலங்களவையில் அமித் ஷாவின் கன்னிப்பேச்சு!

நடந்துவரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், முதன்முதலாக தனது கன்னிப்பேச்சை ஆற்றினார் பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா. மத்திய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சியைக் குறிவைத்தே, அவரது பேச்சு அமைந்திருந்தது.

தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி கூட்டம் நடந்து வருகிறது. இன்று (பிப்ரவரி 5) முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மதியம் 2 மணியளவில் மாநிலங்களவை கூடியது. பாஜகவின் தேசியத்தலைவர் அமித் ஷா, இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார். அவர் பேச்சைக் கேட்பதற்காக, பிரதமர் நரேந்திரமோடி மாநிலங்களவைக்கு வந்திருந்தார். மாநிலங்களவையில் அமித் ஷாவின் கன்னிப்பேச்சு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசிய அமித் ஷா, பாஜகவின் ஆட்சி பற்றிய காங்கிரஸின் கிண்டல்களுக்குப் பதிலளிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். அவரது பேச்சை எதிர்கட்சியினர் இடைமறித்தபோது, ”இன்னும் 6 ஆண்டுகளுக்கு நீங்கள் என் பேச்சை கேட்டுத்தான் ஆகவேண்டும்” என்று கூறினார். வேகமாக முன்னேற்றம் வேண்டுமென்ற விரும்பிய மக்கள் பாஜகவைத் தேர்ந்தெடுத்ததாகவும், ஏழைகளை முன்னேற்ற வேண்டுமென்பதில் இந்த ஆட்சி உறுதியாக உள்ளதாகவும் தன் பேச்சில் குறிப்பிட்டார் அமித் ஷா.

ஜிஎஸ்டியை கப்பார்சிங் வரி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் சொன்னதற்கும், பக்கோடா விற்பது பற்றிய மோடியின் பேச்சை முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கண்டித்ததற்கும், அமித் ஷா தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். “பக்கோடா விற்பதை பிச்சையெடுப்பதுடன் ஒப்பிடுகிறார் சிதம்பரம். பக்கோடா விற்பவர்கள் சுய வேலைவாய்ப்பை உண்டாக்கிக் கொண்டவர்கள். பக்கோடா விற்பதும் பிச்சையெடுப்பதும் ஒன்றா?” என்று கேள்வியெழுப்பினார்.

இந்தியாவில் வேலைவாய்ப்பில்லாமல் இளைஞர்கள் அவதிப்படுவதை, தான் ஒத்த்துக்கொள்வதாகத் தெரிவித்தார் அமித் ஷா. “அதை நான் மறுக்கவில்லை. இந்த நாட்டை நீங்கள்தான் 55 ஆண்டுகளாக ஆட்சி செய்தீர்கள். அதனால், இந்தப் பிரச்சனைக்கு யார் காரணமென்று கேட்க விரும்புகிறேன். நாங்கள், எட்டு ஆண்டுகளாகத்தான் ஆட்சி செய்திருக்கிறோம். இந்தப் பிரச்சனை வெறும் எட்டு ஆண்டுகளில் மட்டும் உருவாகவில்லை” என்றார். ஸ்டார்ட் அப் இந்தியா, முத்ரா யோஜனா போன்ற திட்டங்களால் எதிர்காலத்தில் இளைஞர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தாய்மார்களும் சகோதரிகளும், பாதுகாப்பாகவும் பயமில்லாமலும் வாழ்வதற்காகவே, பாஜக அரசு முத்தலாக் எதிர்ப்பு மசோதாவைக் கொண்டுவருவதாகக் குறிப்பிட்டார் அமித் ஷா. மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்குப் பிறகு, எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தயாரான நிலையில் இந்தியா இருப்பதாகக் கூறினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 5 பிப் 2018