பெயர் மாறும் கலால் வரி ஆணையம்!

மத்திய கலால் மற்றும் சுங்க வரி ஆணையம் (சிபிஇசி) வருகின்ற ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு மத்திய மறைமுக மற்றும் சுங்க வரிகள் வாரியமாக (சிபிஐசி) பெயர் மாறுகிறது.
2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பைக் கொண்டுவரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்தியது. இதன்படி பெரும்பான்மையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மத்திய அரசு ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தியது. இதனால் முன்னதாக கடைபிடிக்கப்பட்டு வந்த மத்திய அரசின் கலால் வரி மற்றும் மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி ஆகிய இரண்டும் நீக்கப்பட்டது.
5, 12, 18, 28 ஆகிய நான்கு வகை வரிவிதிப்புகள் ஜிஎஸ்டி திட்டத்தில் அமல்படுத்தப்பட்டது. மாநில ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி என்ற மூன்று பிரிவுகள் கொண்டுவரப்பட்டன. தற்போது கலால் வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி ஆகியவை நீக்கப்பட்டுள்ளதால் மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி மத்திய கலால் மற்றும் சுங்க வரி ஆணையம் வரும் ஏப்ரலுக்குப் பிறகு மத்திய மறைமுக மற்றும் சுங்க வரிகள் வாரியமாகப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.