பத்திரிகையாளரைக் காப்பாற்றிய மனைவி: வைரல் வீடியோ!


உத்தரப் பிரதேசத்தில் தனது கணவரைத் தாக்கிய கும்பல் மீது அவரது மனைவி துப்பாக்கிச் சூடு நடத்திக் காப்பாற்றிய வீடியோக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
உத்தரப் பிரதேசத் தலைநகரான லக்னோ மற்றும் கக்கோரி பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் அபிட் அலி. இவர் நிலக் கையகப்படுத்துதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் அபிட் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் அவரை வெளியே வரவழைத்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கியது.
அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த அவரது மனைவி தனது கணவர் தாக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே உள்ளே சென்று துப்பாக்கியை எடுத்து வந்து மர்ம நபர்களை நோக்கி சுடத் தொடங்கியுள்ளார். இதையடுத்து அந்தக் கும்பல் அலறியடித்து ஓடியுள்ளது.
பின்னர் அவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த காவல் துறையினர் அந்த மர்ம கும்பலைத் தேடிவருகின்றனர். நிலக் கையகப்படுத்துதல் சர்ச்சை தொடர்பாக அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பத்திரிகையாளரின் மனைவியின் தைரியமான செயலுக்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்துள்ளன.