மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

மூன்று பேரைக் கொன்ற யானை பிடிபட்டது!

மூன்று பேரைக் கொன்ற யானை பிடிபட்டது!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரிப் பகுதியில் மூன்று பேரை கொன்ற 18 வயதான ஒற்றைக் காட்டுயானை நான்கு மயக்க ஊசிகள் போட்டு ஏழு மணிநேர போராட்டத்துக்குப் பிறகு பிடிக்கப்பட்டது.

காட்டுயானை கூட்டத்திலிருந்து பிரிந்த காட்டுயானை ,கடந்த சில நாட்களாக சூளகிரிப் பகுதியில் சுற்றிவந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்திவந்தது. ஜனவரி 24ஆம் தேதி மாடு ஒன்றை தாக்கியதையடுத்து, அந்த யானை வனத்துறையினரால் காட்டுக்குள் விரட்டியக்கப்பட்டது. இதையடுத்து, நேற்றுமுன்தினம் (பிப்ரவரி 3) பத்தாகோட்டா கிராமத்தைச் சேர்ந்த ராஜப்பா என்பவரை, ஒற்றை யானை தூக்கி வீசி மிதித்துக் கொன்றது.

அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன், முனிகிருஷ்ணன் ஆகியோர் காட்டு யானை தாக்கிக் காயமடைந்தனர். மீண்டும் நேற்று (பிப்ரவரி 4) காலை சின்னாறு பகுதிக்கு வந்த யானை, தேவர்குட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனிராஜ் என்பவரைக் கொன்றது. இப்படி, மனிதர்களைக் கொன்றுவரும் காட்டு யானையை மயக்க ஊசி போட்டுப் பிடிக்க வனத் துறையினர் முடிவு செய்தனர்.

ஆனால், யானை எங்கிருக்கிறது என்பதைப் பலமணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குள், இன்று (பிப்ரவரி 5) காலை சின்னாறு அருகே ஒட்டையனூர் என்ற பகுதியில் விவசாயி தேவன் என்பவரை யானை தாக்கிக் கொன்றது.

மூன்று நாட்களில் மூன்று பேரைக் கொன்ற யானையை வனத் துறையினர் தீவிரமாகத் தேடினர்.

ஒட்டையனூர் பகுதியில் காட்டு யானையை கண்டறிந்த வனத் துறையினர் யானையை மயக்க ஊசி போட்டுப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினர். துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க ஊசி போடப்பட்டது. இருந்தும், யானை காட்டுக்குள் ஓடிவிட்டது.பொதுவாக, இரண்டாவது மயக்க ஊசியில் யானை மயங்கிவிடும். ஆனால்,இந்த யானைக்கு இரண்டாவது ஊசியும் போட்டு மயக்கம் வரவில்லை. மூன்றாவது ஊசி செலுத்தப்பட்டும், பிடிபடாத யானை நான்காவது ஊசியில்தான் மயங்கிக் கீழே விழுந்தது.

ஏழு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்பு ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன் யானையை வாகனத்தில் ஏற்றி கர்நாடகாவின் பன்னார்கட்டா வனப்பகுதிக்குக் கொண்டுசெல்ல வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, கடந்த சில நாட்களாக தங்கள் உயிரைக் கையில் பிடித்திருந்த அப்பகுதி கிராம மக்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

கடந்த ஆண்டு யானை தாக்கி 157 பேர் உயிரிழப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 5 பிப் 2018